Published : 26 Dec 2021 05:35 PM
Last Updated : 26 Dec 2021 05:35 PM
சென்னை: ஒமைக்ரான் வகை கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒமைக்ரான் பரவலைத் தடுக்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் இதர துறைகளுடன் இணைந்து எடுத்து வரும் முன்னெச்சரிக்கை -நடவடிக்கைகள் குறித்து கடந்த 24- ம் தேதிஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று (26.12.2021) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தினை பார்வையிட்டு, அங்கு கோவிட் நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்த ஏற்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.
மேலும், தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அவசரகால ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்புக் கிடங்கினையும், உயிர் காக்கும் அவசர சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் பார்வையிட்டார்.
பின்னர், 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர கால அழைப்பு நிலையம், அவசரகால கட்டுப்பாட்டு அறை (Emergency Control Room) மற்றும் மாநில கட்டளை மையத்தையும் (State War Room) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான அறிவுரைகளை வழங்கி இவ்வளாகத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கொரோனா தடுப்பூசி மையத்தினையும் ஆய்வு செய்தார்.
ஒமைக்ரான் வகை கரோனா நோய்தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1.15 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தற்காலிக கோவிட் சிறப்பு மையங்களில் தேவைக்கேற்ப 50,000 படுக்கைகள் வரை ஏற்படுத்த ஆணை வழங்கப்பட்டு அவற்றை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த கோவிட் அலையின் போது ஏற்பட்ட மருத்துவ ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினை முழுதும் நீக்கும் வகையில் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 222 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களையும், இவற்றின் மூலம், இன்றைய தேதியில் கூடுதலாக நாள்தோறும் 244 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது, மேலும் திரவ ஆக்ஸிஜன் இருப்பு வைக்கும் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, 1,731 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் சேமித்து வைக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 17,940 ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் மூலம் 167 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இவை தவிர சுமார் 25,000 பி மற்றும் டி வகை ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் உள்ளன.
ஒமைக்ரான் வகை கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் அனைத்து தேவையான கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நாள்தோறும் வெளிநாட்டு பயணிகள் வருகை மற்றும் ஒமைக்ரான் குறித்த விவரங்களை தினசரி அறிக்கையில் (Media Bulletin) கூடுதலாக வெளியிட அறிவுறுத்தினார்.
இதுவரை தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியினை 85 சதவீதத்தினரும், இரண்டாம் தவணை தடுப்பூசியினை 55 சதவீதத்தினரும் செலுத்தியுள்ளனர் நாட்டில் ஓமிக்ரான் நோய்த்தொற்று அச்சுறுத்தல் உள்ள நிலையில் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்தி கரோனா நோய் தொற்றிலிருந்து தம்மை பாதுகாப்பது மட்டுமல்லாமல் நோய் பரவலை தடுக்க உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கொரனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் தவறாமல் தொடர கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT