Last Updated : 26 Dec, 2021 05:23 PM

5  

Published : 26 Dec 2021 05:23 PM
Last Updated : 26 Dec 2021 05:23 PM

அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை: உதயநிதி ஸ்டாலின் பேச்சு 

பிரதிநிதித்துவப் படம்.

கோவை: அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை என கோவையில் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், திமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம், காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் அரங்கில் இன்று (டிச.26) நடந்தது. இந்த முகாமுக்கு கோவை மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பேசுகையில் கூறியாதாவது: ''கோவையில் சிறப்பான, எழுச்சியான வரவேற்பை பார்க்க முடிந்தது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2 நாட்கள் கோவையில் தங்கி பணிபுரிந்தேன். 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று இருந்தேன். ஆனால், கோவை மக்கள் ஏமாற்றி விட்டீர்கள்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், காளப்பட்டியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடந்த உறுப்பினர் சேர்ப்பு முகாமை, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் உள்ளனர். படம் : ஜெ.மனோகரன்.

தமிழக முதல்வர் பொறுப்பேற்ற போது, கரோனா தொற்று கோவையில் அதிகம் இருந்தது. ஆட்சிக்கு வந்த முதல் 2 மாதங்கள் கரோனாவை எதிர்த்து போராட வேண்டி இருந்தது. தற்போது ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. அதேசமயம், தமிழக மக்களை பாதுகாக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழக முதல்வர் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றார். நீங்கள் கழகத்தில் சேர்ந்துள்ளீர்கள், திமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். கள வீரர்களாக செயல்பட வேண்டும். இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்ற உடன், 24 லட்சம் புதிய உறுப்பினர்களை தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து சேர்த்தோம்.

திமுக தலைவர் இப்போது 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி எனக்கு வழங்க வேண்டும் என இங்கு பேசியவர்கள் கூறினார்கள். நான் அதை விரும்பவில்லை. தலைவருக்கு துணையாக இருக்கவும், தலைவருக்கும் உங்களுக்கும் பாலமாக இருக்கவும் விரும்புகின்றேன்,'' என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா என்ற ஆர்.கிருஷ்ணன், சிஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன், ஜெயராமகிருஷ்ணன், மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞரணி, சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாநகர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 500 இளம் பெண்கள், 500 இளைஞர்கள் என ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x