Published : 26 Dec 2021 02:36 PM
Last Updated : 26 Dec 2021 02:36 PM
சென்னை: 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஜனவரி 3முதல் தடுப்பூசி செலுத்தவும், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவும் ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சென்னை கிண்டி, மடுவின்கரையில் இன்று (26-12-2021) மாபெரும் 16வது கரோனா தடுப்பூசி முகாமினை தமிக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இதுவரை தமிழகத்தில் 8.14 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் முதல் தவனை 84.87% பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 55.85% பேரும் செலுத்தியுள்ளனர். தேசிய அளவில் 88.59% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களில் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் தனிமைபடுத்துதலில் ஈடுபட்டு, நலமுடன் உள்ளனர். ஜனவரி 3ம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயது கொண்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.
அதில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டு, இதுவரை 6.18 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 15-18 வயதுள்ளவர்கள் 33.20 லட்சம் சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தம் பணி துவங்க உள்ளது. பள்ளிகளுக்கே சென்றும், முகாம்கள் மூலமும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மேலும், முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த பிரதமர் அறிவித்துள்ளார்.
அதன்படி முன்களப்பணியாளர்கள், 1.40 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தும்
பணி துவங்கும். தமிழகத்தில் 9.78 லட்சம் பேர் மருத்துவ முன்களப்பணியாளர்கள் உள்ளனர். அதில் 5 லட்சம் சுகாதார பணியாளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் 2ம் தவணை தடுப்பூசியை செலுத்த தவறியவர்கள் 95 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் விரைந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். விரைவில் 2,400 பேர் சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மேலும், நவம்பர் 31ம் தேதியுடன் ஒப்பந்தம் பணியாளர்களின் பணிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், மார்ச் 31ம் தேதி வரை யாரையும் விடுக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும், அரசின் வழிமுறைகறை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து முககவசம் அணியாத நபர்களிடம் இருந்தும், அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாறி, மக்களே பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT