Published : 26 Dec 2021 01:35 PM
Last Updated : 26 Dec 2021 01:35 PM
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்காக ரயில்களில் ஒதுக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகளில் நடந்துவரும் முறைகேடுகளைக் களையக் கோரி ஜனவரி 10-ல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்காக ரயில்களில் ஒதுக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகளில் கரோனா காலத்தில் ரத்துசெய்யப்பட்டது. அதன்பிறகு மீண்டும் ரயில்கள் இயக்கம் தொடங்கப்பட்டபிறகு அதில் மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்படவில்லையென்றும் அச் சிறப்புப்பெட்டிகளில் மற்றவர்களை அனுமதித்து முறைகேடுகள் நடைபெறுவதாகம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த சிறப்புப்பெட்டிகள் மீண்டும் மாற்றுத் திறனாளிகளுக்ககா திறக்கவேண்டும் எனக்கோரி ஜன. 10ல் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாகர்கோவிலில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC) மாநிலக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச-26) மாநில தலைவர் பா. ஜான்ஸிராணி தலைமையில் நடைபெற்றது.
இச் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. கூட்ட நெரிசல்களில் பயணிக்க முடியாது என்பதாலும், இரயில் பயணங்களில் சமவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையிலும் நீதிமன்ற தீர்ப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள், உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக ஓரளவு நிம்மதியுடன் பயணம் செய்து வந்தனர். கரோனா பெருந்தொற்று காரணமாக ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டது. தற்போது சகஜ நிலை பெருமளவு திரும்பி, ரயில் போக்குவரத்தும் சகஜமாகி உள்ளன. எனினும், ரயில்களில் இருபுறமும் இணைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகளில் பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் கடந்த சுமார் ஒன்றே முக்கால் ஆண்டுகாலமாக மறுத்து வருகிறது. இது மாற்றுத்திறனாளிகள் சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமானது.
மாற்றுத் திறனாளிகளுக்கு பயணம் செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ரயில்வே ஊழியர்கள், காவல்துறை மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்கள் பயணம் செய்ய மட்டும் முறைகேடாக அனுமதித்து வருவது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. எனவே, அனைத்து ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகளை திறந்து பயணம் செய்ய உடனடியாக அனுமதிக்க வேண்டும். அதற்குரிய சலுகை கட்டண பயணச்சீட்டுகளை அனைத்து ரயில் நிலையங்களிலும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜன-10 திங்கள் கிழமை இப்போராட்டத்தை நடத்திட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
மருத்துவச்சான்றிதழுக்கு அலைக்கழிப்பா?
2. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் உடனடியாக தொடங்கி நடத்த வேண்டும். அதைப்போன்று நாகர்கோவில், பத்மநாபபுரம் கோட்டாட்சியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்டங்களும் முறையாக நடத்த வேண்டும்.
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் ஊனத்திற்கான சான்று, ரயில்-பேருந்து பயண சலுகைக்கான சான்றுகள் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். உரிய வழிகாட்டுதல்களை மருத்துவர்கள் பின்பற்றுவதில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்கிறது. வாரம்தோறும் நடக்கும் சான்றளிப்பு முகாமுக்கு வரும் மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் செலவினங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வழங்கும் நிலையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் நேரடிக் கண்காணிப்பில் அவரது அலுவலகத்தில் நடத்துமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறானிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT