Published : 26 Dec 2021 06:56 AM
Last Updated : 26 Dec 2021 06:56 AM
சென்னை: பார்வையற்ற வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின் நலனுக்காக இந்திய நீதித் துறையில் முதன்முறையாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றமதுரை கிளையில் ‘பிரெய்லிபிரிண்டர்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உயர் நீதிமன்றமும், அதன் ஆளுகையின் கீழ் உயர் நீதிமன்ற மதுரை கிளையும் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான முக்கிய வழக்குகளின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்விலேயே நடைபெறுகிறது.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காணொலியில் விசாரணைகள் நடைபெற்று வந்தன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நேரடி விசாரணை முறையிலும், காணொலி வாயிலாகவும் நடந்து வருகிறது. வழக்கறிஞர்கள் மட்டும் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வழக்காடிகளுக்கு அனுமதியில்லை. இருப்பினும் ‘பார்ட்டி - இன்- பெர்சன்’ என்ற முறையில் வழக்கு தொடரும் நபரே நேரில் ஆஜராகி வாதிட விருப்பம் தெரிவிக்கும் வழக்காடிகள் உயர் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படு கின்றனர்.
இந்நிலையில், இந்திய நீதித் துறையில் முதன்முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்ற வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின் நலனுக்காக ‘பிரெய்லி பிரிண்டர்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் இந்த ‘பிரெய்லி பிரிண்டர்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் உயர் நீதிமன்றம் அன்றாடம் பிறப்பிக்கும் உத்தரவுகள், தீர்ப்புகளின் நகல்கள் மற்றும் ஆவணங்களை பார்வையற்ற அல்லது பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள், கையால் தொட்டு புள்ளிகளை ஒன்று சேர்த்து படிக்க முடியும். இந்த பிரிண்டர்களில் ஒரு மணி நேரத்துக்கு 350 பக்கங்களை இருபுறமும் அச்சிட முடியும்.
சாஃப்ட்வேர் மூலம் மாற்றம்
வழக்கமான நடைமுறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்ட உத்தரவு மற்றும் தீர்ப்பு நகல்களை ஆன்லைன் வாயிலாக இந்த பிரிண்டரில் உள்ள சாஃப்ட்வேர் அவற்றை பிரெய்லி பக்கங்களாக மாற்றி வெள்ளைத் தாள்களில் புள்ளி வடிவில் அச்சிட்டு வழங்கும்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மாற்றுத் திறனாளி வழக்கறிஞர் ஆர்.எம்.டி.நஸ்ருல்லா கூறியதாவது:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நீதித் துறையில் எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிவழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின் நலனுக்காக ‘பிரெய்லிபிரிண்டர்’ வசதி செய்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி வழக்கறிஞர்களும், பார்வைக்குறைபாடு உள்ள வழக்காடிகளும், உயர் நீதிமன்ற தீர்ப்புகளை யாருடைய உதவியும் இல்லாமல் தன்னிச்சையாக படிக்க வசதியாக இருக்கும்.
ஏற்கெனவே, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் தங்களது செல்போன் எண்களை ஆஜராகும் வழக்குகளுடன் இணைத்துக்கொண்டால், அவர்கள் அன்றாடம் ஆஜராக வேண்டிய வழக்குகளுக்கு அவர்களின் பதிவு எண் மற்றும் விவரங்களை சரிபார்த்து ஆன்லைன் மூலமாகவே ஒப்புதல் வழங்கப்படுகிறது. மேலும், வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் வழக்கறிஞர்கள் உடனுக்குடன் குறுஞ்செய்தி வாயிலாகவும் பெற முடியும்.
‘வீடியோ லைப்ரரி’
இதுபோன்ற ஆன்லைன் வசதிகளையும் மாற்றுத் திறனாளி வழக்கறிஞர்கள் எளிதாக பெறும் வகையில் ஆடியோ வசதி கொண்ட ‘வீடியோ லைப்ரரி’ வசதியையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிமுகம் செய்தால் அது நாட்டுக்கேமுன்மாதிரியாக இருக்கும்.
அதன்மூலம் செல்போன்களிலேயே எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளி வழக்கறிஞர்கள் எளிதாக நீதிமன்ற தீர்ப்புகளையும், தேவையான ஆவணங்களையும் கேட்டு அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT