Published : 19 Mar 2016 05:28 PM
Last Updated : 19 Mar 2016 05:28 PM
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு கையேடு விருதுநகரில் கல்லூரி முதல்வர்களிடம் வழங்கப்பட்டது.
மக்கள் தொகையில் 2-ம் இடம் வகிக்கும் இந்தியாவில் அதிக அளவில் வாக்காளர்களை தேர்தல் நடைமுறையில் எஸ்விஇஇபி (முறையாக வாக்காளர்களுக்கு அறிவூட்டல் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்றல்) என்ற விழிப்புணர்வு முறைகள் மூலம் தேர்தல் ஆணையம் பங்கேற்கச் செய்கிறது. இந்திய அரசியல் அமைப்பு, ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடிமகனுக்கும் இனம், மதம், சாதி, கல்வி, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் வாக்குரிமை, அனைவரது வாக்குகளுக்கும் சம உரிமை அளித்திருக்கிறது.
எஸ்விஇஇபி என்ற செயல்பாடு மூலம் வாக்காளர் எங்கே, எப்படி வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வது மற்றும் வாக்களிப்பது குறித்த நடைமுறை சிக்கல்களைக் களைய உரிய தகவல் அளித்தல், மக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்களை களைந்து தேர்தல் நடைமுறையில் பங்கேற்கும் வகை யில் ஊக்கப்படுத்துதல் மற்றும் குடிமக்களின் தேர்தல் பங்கேற்பை சுலபமாக்குதல், வசதியாக்குதல் மற்றும் எளிமையாக்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, 18 வயது பூர்த்தியான அனைத்து இளைஞர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்வதும், அவர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக கல்லூரி மாணவ, மாணவிகள் யாரும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இருக்கவும், அவர்களை தேர்தலின்போது வாக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தும் வழிகாட்டி கையேடு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி முதல்வர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதில், வாக்காளர் பட்டியலில் எவ்வாறு பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது, நீக்குவது தொடர்பாக விண்ணப்பிக்கும் வழிமுறைகள், வாக்காளர் அடையாள அட்டை பெறும் வழிமுறைகள் மற்றும் வாக்குப் பதிவின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியரு மான வே.ராஜாராமன் தலைமையில் கல்லூரி முதல்வர்க ளுடனான கலந்தாய்வுக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. அப்போது, 18 வயது பூர்த்தியான மாணவ, மாணவிகளின் பெயரை ஆன்-லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யவும், ஒவ்வொரு கல்லூரி முதல்வரும் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்து சான்று அளிக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT