Published : 02 Apr 2014 12:00 AM
Last Updated : 02 Apr 2014 12:00 AM
ஆட்டோ, வேன், கார் பிரச்சாரங்களை கடந்து எல்.இ.டி வேன்கள் மூலம் ஹைடெக் பிரச்சாரம் செய்து கோவைப் பகுதியை கலக்கிக் கொண்டிருக்கிறது அதிமுக.
ஜெயா டி.வி அடையாளம் தாங்கி வரும் அந்த வேன்களின் முகப்பில் 'பிரஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது. வேனின் இடது பக்கவாட்டில் பிரம் மாண்டமான எல்.இ.டி திரை நிறுத் தப்பட்டுள்ளது. இந்த வேன்கள் மக்கள் நடமாட்டமுள்ள சந்து பொந்துகளிலும் சென்று நிற்கிறது. தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா இதுவரை கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களையும் அதற்காக திரட்டப்பட்ட மக்கள் கூட்டத்தையும் ஒரு மணி நேரத்துக்கும் குறை வில்லாமல் எல்.ஈ.டி. திரையில் ஓடவிடுகிறார்கள். இதை மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
இந்தப் பிரச்சாரத்துக்காக 4 எல்.இ.டி. வேன்கள் கோவையில் சுற்றி வருகின்றன. இதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது என்று எதிர்க் கட்சிகள் சர்ச்சையை கிளப்பும் அதே சமயம், இந்தப் பிரச்சாரத்தை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனுமதிக்கிறதா இல்லையா என்பது குறித்து அதிகாரிகளும் தெளிவான விளக்கம் தருவதில்லை. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தரப்பில் இதுகுறித்துப் பேசியபோது, ‘‘சென்னையில் உயர் அதிகாரியிடம் அனுமதி வாங்கியாச்சு. தேர்தல் கமிஷனும் இதற்கு அனுமதிச் சிருக்குன்னு ஏதேதோ ஆதாரம் காட்டுறாங்க. இரவு 11 மணி வரைக்கும் நேரம் காலமில்லாம எல்.இ.டி பிரச்சாரம் செஞ்சுட்டிருக்காங்க. முதல்வர் பிரச்சாரம் செய்யும் ஊர்களுக்கு 3 நாள் முன்கூட்டியே இந்த பிரச்சாரத்தை ஊர் ஊரா செய்யணும்னு உத்தரவுனு கட்சி நிர்வாகிகள் சொல்றாங்க’’ என்றார்.
இதேபோல், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுக அரசின் சாதனைகளையும் வேன்களில் மெகா சைஸ் திரைகளை கட்டி ஒளிபரப்பு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT