Last Updated : 26 Dec, 2021 09:19 AM

 

Published : 26 Dec 2021 09:19 AM
Last Updated : 26 Dec 2021 09:19 AM

காஞ்சிபுரம்: போக்குவரத்து நேரிசலைக் குறைக்க வாகன நிறுத்துமிடம் பக்தர்கள் தங்கும் விடுதியை விரைவில் திறக்க வேண்டும்: அறநிலையத் துறைக்கு பக்தர்கள், உள்ளூர்வாசிகள் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: கோயில் நகரமாக விளங்கும், காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வடமாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆன்மிக சுற்றுலா வந்து செல்கின்றனர். சுற்றுலாவாகனங்கள் முக்கிய சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா வாகனங்களை நகருக்குவெளியே நிறுத்தவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியின் மூலம் ஒலிமுகம்மது பேட்டைஅருகே ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் ரூ.24 கோடி மதிப்பில் 3 தளங்களுடன் கூடிய ‘யாத்ரீ நிவாஸ்’ எனப்படும் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

இதில், குளிர்சாதன வசதியுடன்கூடிய 34 அறைகள், உணவகம்,நவீன வசதியுடன் கூடிய கூட்டரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆன்மிக சுற்றுலாவாக பேருந்துகளில் வரும் பக்தர்கள் ஒரே இடத்தில் தங்குவதற்காக, சுமார் 300 நபர்கள் தங்கும் வகையில் விடுதி வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடுதியின் அருகேசுமார் 150 பேருந்துகள் நிறுத்தும்வகையில் ‘பிரசாத்’ திட்டத்தில் ரூ.5.41 கோடி மதிப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், வைஃபை, சோலார்மின்விளக்குகள், கழிப்பறைகள்,ஓட்டுநர்கள் தங்குமிடம் மற்றும்புராதன தகவல்களை வெளிப்படுத்தும் அருங்காட்சியகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக ஓர் ஆண்டாக காத்திருக்கிறது.

இந்நிலையில், கரோனா அச்சத்தின் நடுவே தற்போது ஆன்மிக சுற்றுலா பேருந்துகள் நகருக்குள் அதிகம் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த பக்தர்கள் தங்கும்விடுதி, சுற்றுலா பேருந்துகளுக்கான வாகன நிறுத்துமிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, உள்ளூர் மக்கள் கூறியதாவது: சபரிமலைக்குச் சென்று திரும்பும் பக்தர்கள், காஞ்சி நகரில் உள்ள முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனம்செய்வது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்களின் வாகனங்கள், நகரின் முக்கிய சாலையோரங்களில் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. மேலும், அங்கேயே உணவு சமைத்து சாப்பிடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கட்டப்பட்ட வாகனநிறுத்துமிடம், ‘யாத்ரீ நிவாஸ்’திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது என்றனர்.

இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: யாத்ரீநிவாஸ் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை உரிய கட்டணங்களுடன் பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறப்பது தொடர்பாக அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆணையரின் அனுமதி கிடைத்ததும் திறக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x