Last Updated : 26 Dec, 2021 09:18 AM

 

Published : 26 Dec 2021 09:18 AM
Last Updated : 26 Dec 2021 09:18 AM

தேனி வழித்தடத்தில் 24 மணி நேரமும் ஐயப்ப பக்தர்களுக்காக அன்னதான முகாம்கள்

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக பழனிசெட்டிபட்டி அன்னதான முகாமில் உணவு தயாரிக்கப்படுகிறது.

கம்பம்

தேனி மாவட்ட வழித்தடத்தில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் முகாம்கள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன.

சபரிமலைக்கு தேனி மாவட்டம் முக்கிய வழித்தடமாக உள்ளது. எனவே ஐயப்ப பக்தர்களுக்கு சேவை செய்யும் நோக்கில், ஆன்மிக ஆர்வலர்கள் பலரும் அன்னதான முகாம்களை அமைத்துள்ளனர். தேனி, பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் என்று வழிநெடுகிலும் இதற்கான முகாம்கள் செயல்படத் தொடங்கி உள்ளன.

இங்கு காலை, மாலையில் டிபன், பிற்பகலில் சாப்பாடு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

தேனி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்க பழனிசெட்டிபட்டி கிளைச் செயலாளர் நாகராஜன் கூறுகையில், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சாப்பாடு, பொங்கல், காய்கறி சாதம் என ஒவ்வொரு நாளும் உணவு தயாரித்து வழங்கி வருகிறோம்.

அதோடு மருத்துவ உதவி, நிலவேம்புக் கசாயம், சுக்குமல்லி காபி, பாத யாத்திரை பக்தர்கள் ஓய்வெடுக்க இடவசதி, ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுதல் உள்ளிட்ட இதர சேவையும் செய்கிறோம் என்றார்.

வழி நெடுகிலும் உள்ள முகாம் களில் சேவை அடிப்படையில் ஆன்மிக ஆர்வலர்கள் காய்கறி நறுக்குதல், உணவு தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உபயதாரர்கள் பலரும் அன்ன தானத்துக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்றனர்.

நள்ளிரவு, அதிகாலையில் பக்தர்கள் வந்தால் உப்புமா உள்ளிட்ட உணவை தயாரித்து வழங்குகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x