Published : 26 Dec 2021 09:10 AM
Last Updated : 26 Dec 2021 09:10 AM

வெளிநாட்டு கடல்பாசி வளர்க்க அனுமதி: மன்னார் வளைகுடா பவளப்பாறைகளுக்கு ஆபத்து

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் உள்ள பவளப் பாறைகளை சூழ்ந்திருக்கும் கப்பாபைகஸ் ஆல்வரேசி பாசி.

ராமேசுவரம்

களையாகப் படரக்கூடிய ‘கப்பாபைகஸ் ஆல்வரேசி’ என்ற வெளிநாட்டு கடல்பாசியை வணிக ரீதியாக மன்னார் வளைகுடா கடற்பகுதியில் வளர்க்க அனுமதி வழங்கினால், பவளப் பாறைகளை அழித்துவிடக்கூடிய ஆபத்து உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலும் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 21 தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுகளைச் சுற்றிலும் பவளப்பாறைகள் , கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களான கடல் பசு, டால்பின்கள் அதிகமாகக் காணப் படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே அதிகளவில் 4,223 கடல்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இங்குதான் உள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டுக் கடல் பாசி வடிவில் மன்னார் வளைகுடா பவளப்பாறைகளுக்கு புதிய ஆபத்து உருவாகியுள்ளது. இது குறித்து ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறியதாவது: பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து, 1995-ல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட ‘கப்பாபைகஸ் ஆல்வரேசி’ எனப்படும் வளர்ப்பு கடல்பாசி, பவளப்பாறைகளின் மீது படர்ந்து, அவற்றை முற்றிலுமாக மூடி, ஒளிச்சேர்க்கை நடைபெறவிடாமல் தடுத்து உயிரோடு அழித்து விடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

தற்போது குஜராத்திலுள்ள மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம் மன்னார் வளைகுடாவில் கடற் பாசி சாகுபடிக்காக மேலும் ஐந்து இடங்களை பயிரிடுவதற்காக தேர்ந்தெடுத்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் களையாகப்படரக்கூடிய ‘கப்பாபைகஸ் ஆல்வரேசி’ வெளிநாட்டு கடல்பாசியை வளர்க்க அனுமதி வழங்கக்கூடாது, இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x