Published : 25 Dec 2021 04:42 PM
Last Updated : 25 Dec 2021 04:42 PM
புதுச்சேரி: "தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஒமைக்கரான் போன்று வேறு தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்க முடியும்" என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் நல்லாட்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களின் குறை தீர்த்தல் இதன் முக்கிய அம்சமாக செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக புதுச்சேரி அடுத்த திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் நல்லாட்சி தின விழா நடைபெற்றது. இந்த விழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ், பட்டா, சாதி மற்றும் குடியுரிமைச் சான்றிதழ், விவசாயிகளுக்கான 'கிசான் கடன் அட்டைகள்', மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
மேலும், ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் துறை மற்றும் கால்நடை மருத்துவத்துறைகளின் மூலமாக ரூ.2 கோடி 13 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நல உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக வைப்பு நிதி மற்றும் வளர்ச்சி நிதியுதவி திட்டங்களின்கீழ் நிதியுதவியும், சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வங்கிக் கடனுதவிகளையும் வழங்கினார். வேளாண்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் மானியம் வழங்குவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
பின்னர் ஆளுநர் தமிழிசை பேசுகையில், ‘‘புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக வந்திருப்பது எனக்கு கிடைத்த வாய்ப்பு. தமிழ் தெரிந்திருப்பதால் மக்களின் பிரச்சினைகளை நேரடியாக புரிந்து கொள்ள முடிகிறது. ஜனவரி மாதம் வீடுவீடாக வந்து தடுப்பூசி செலுத்துவோம் என்று உள்துறை அமைச்சர் கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டால் பாதுகாப்பாக இருக்க முடியும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஒமைக்கரான் போன்று வேறு தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
தேசிய இளைஞர் திருவிழா புதுச்சேரியில் நடக்க இருக்கிறது. நாடு முழுவதும் இருந்து 7,500 இளைஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இது புதுச்சேரிக்கு கிடைத்திருக்கின்ற பெருமை.
கரோனா பாதுகாப்போடு விழா நடைபெறும். தடுப்பூசி போடுவதை கட்டாயப்படுத்தி இருக்கிறோம். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். கைகளை கழுவுவது பழக்கமாகக் கொள்ளுங்கள். பிரதமர் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறார். பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று ஆளுநர் தமிழசை பேசினார்.
விழாவில் அமைச்சர் நமசிவாயம் பேசும்போது, ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 10 லட்சத்து 36 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்களாக உள்ளனர். ஆனால் இன்றைக்கு முதல் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 36 ஆயிரம் பேர் தான் போட்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி 4 லட்சத்து 56 ஆயிரம் பேர் தான் செலுத்திக்கொண்டுள்ளனர். மீதமுள்ள 3 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே போடாமல் இருக்கின்றனர். கரோனா பெருந்தொற்றினால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துகிறது.
கரோனா வந்ததால் எவ்வளவு அவதியுற்றோம் என்பது எனக்கும், முதல்வருக்கும் தான் தெரியும். இன்றைக்கும் எங்களால் பழையபடி செயல்பட முடியாத சூழல் உள்ளது. எனவே, உங்களுக்கும் கரோனா தொற்று வந்துவிடக் கூடாது. நாங்கள் பட்ட கஷ்டம் நீங்களும் படக்கூடாது என்பதற்காகத்தான் தடுப்பூசி போட சொல்கிறோம். தை மாதம் முதல் நானே வீடு வீடாக வந்து கரோனா தடுப்பூசி போடவுள்ளேன்’’ என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT