Published : 14 Mar 2016 10:40 AM
Last Updated : 14 Mar 2016 10:40 AM

விஜயகாந்த் கனவு மட்டுமல்ல, கட்சியும் கலையப் போகுது: திண்டுக்கல் லியோனியின் கட்சிக்கு ஒரு பாட்டு

பொதுக்கூட்டங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட திமுக பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனியிடம், ‘களத்தில் நிற்கும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு சினிமா பாட் டைப் பாடி ‘நச்’சுன்னு நாலு வார்த்தை சொல்ல முடியுமா? என்று கேட்டோம்.. ‘அதுக்கென்ன சொல்றேன், எழுதிக்குங்க..’ என்று ஆரம்பித்துவிட்டார்.

அதிமுக

‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்.. உறவெல்லாம் முள்ளாகும்.. நினைவெல்லாம் கல்லாகும்..’

இந்தப் பாட்டுதான் இப்ப அதிமுகவுக்கு பொருத்தமான பாட்டு. போன தேர்தல்ல அதிமுகவோட இருந்த கட்சிகள் எதுவும் இப்ப அங்க இல்ல. அமைச்சர்களையே அந்தம் மாவால நம்ப முடியல. மாசத்துக்கு ஒருத் தர தூக்கி அடிக்கிறாங்க. அஞ்சு வருசம் நல்ல வரா தெரிஞ்ச சின்னையா, இப்ப கெட்ட வராகிட்டாரு. கெட்டவரா தெரிஞ்ச சிட்லபாக்கம் ராஜேந்திரன் இப்ப செல்லப் பிள்ளையாம். இத்தனை நாளும் நம்பிக்கை யானவங்களா இருந்த ஐவர் அணி, இப்ப ஐந்தாம்படை ஆகிட்டாங்க. யார நம்புறது, யார சந்தேகிக்கிறதுன்னு அம்மாவுக்கு ஒரே குழப்பமா இருக்குப்பா.

தேமுதிக

‘கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்.. துடுப்புகூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்..’

இது கேப்டனுக்கு. இவ்வளவு நாளும் கட்சி வளர்க்கணும் நினைச்சிட்டு இருந்தவரு இப்ப, தன்னோட பலம் என்னன்னே தெரியாம முதல்வர் கனவில் மிதக்கிறார். கட்சிக்காரங்க இவரோட முடிவால டர்ராகி நிக்கிறாங்க. 2016-ல் விஜயகாந்தோட கனவு மட்டுமல்ல, கட்சியும் கலையப் போகுது.

பாமக

‘இது குழந்தை பாடும் தாலாட்டு.. இது இரவு நேர பூபாளம்.. இது மேற்கில் தோன்றும் உதயம்.. இது நதியில்லாத ஓடம்..’

சின்னப்புள்ளைங்க கூட்டாஞ் சோறாக்கி விளையாடுறது மாதிரி, ‘அன்புமணியாகிய நான்’னு இப்பவே முதல்வர் ஆகிட்ட மாதிரி பிரச்சாரம் பண்றாங்க. இந்தப் பாட்டின் சரணம்கூட பாமகவுக்காகவே எழுதிருப்பாங்க போலிருக்கு. ‘வெறும் நாரில் சரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்.. வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்.. விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனை பார்க்கிறேன்..’

பாவங்க பாமக; இத்தோட விட்டுடலாம்.

மக்கள் நலக் கூட்டணி

‘காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன்.. மணலெடுத்து வீடுகட்டி மழை நீரில் நனையவிட்டேன்..’

இவங்கள நெனச்சா எனக்கு பாவமா இருக்கு. வேலூர் சிறை வாசல்ல நின்னு, ‘எனது ஆயுள் முடியும்வரை கலைஞருக்கு துரோ கம் செய்ய மாட்டேன்’னு சொன்ன வைகோ இப்ப, ‘திமுகவுடன் கூட்டணி வைத்தால் என் கல்லறைகூட என்னை மன்னிக்காது’ என்கிறார். இவரோட கொடுக்கை பிடிச்சுக்கிட்டு தோழர்களும் சிக்குபுக்கு ரயில் விடுறாங்க. இந்த காகித கப்பல் கூட்டணியை ‘அம்மா நலக் கூட்டணி’ன்னு மாத்திருங்கய்யா.

பாஜக

‘நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ.. நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ..’

இதை நம்ம தமிழிசை அடித் தொண்டையில பாடுனாங்கன்னா அம்சமா இருக்கும். அரசியல் களத்துல நடக்குற மாற்றங்களை இவங்களால புரிஞ்சுக்க முடியல. அதனால தான், கூட்டணி பேசவந்த மத்திய அமைச்சர் ’யு டர்ன்’ அடிக்கிறாரு. இவங்க நினைப்பதிலே நடப்பது எத்தனையோ.

திமுக

‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்.. சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்.. கொஞ்சம் முடிந்தால் இங்கு எது கிடைக்காதது.. எண்ணி துணிந்தால் இங்கு எது நடக்காதது..’

போர்க்களத்தில் நிற்கும் வீரன் இன்னொரு வீரனையும் துணைக்கு அழைக்கிறான். அவனோ வரமறுக்கிறான். இதனால் அந்த வீரனுக்கு தன்னைப்போல இன்னொரு ஆள் பலம் கூடுகிறது. போர்க்களத்தை வெல் கிறான். கபடி போட்டியில் கடைசியாய் மிஞ்சி இருக்கும் ஒரு வீரன், எதிரணியில் 6 பேரை யும் ஒரே மூச்சில் வீழ்த்துவதுபோல இம்முறை திமுக அனைத்து அணிகளையும் சாய்க்கும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x