Published : 24 Dec 2021 06:13 PM
Last Updated : 24 Dec 2021 06:13 PM
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை டிசம்பர் 28-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
தமிழக அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி (பி.ஏ.எம்.எஸ்./ பி. எஸ்.எம்.எஸ்./ பி.யு.எம்.எஸ்./ / பி.எச்.எம்.எஸ்.) மருத்துவப் பட்டப்படிப்புகளில் 2021-2022 ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வில் அல்லது அதற்கு நிகரான தேர்வில் (அறிவியல் பாடங்கள் மற்றும் ஆங்கிலம் எடுத்து) தேர்ச்சி பெற்று மற்றும் 2021 மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை (NEET U.G.-2021) எழுதி தேவையான தகுதி சதமான மதிப்பெண் பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
1. தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
2. தமிழ்நாடு சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை (முறையே அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக) www.tnhealth.tn.gov.in – என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சென்னை-106 அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது எந்தவொரு அரசு இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளிலிருந்தோ விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது.
* விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய தொடக்க நாள் : 28.12.2021 காலை 10.00 மணி
* விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் : 18.01.2022 பிற்பகல் 05.00 மணி வரை
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 18.01.2022 பிற்பகல் 05.30 மணி வரை.
விண்ணப்ப கட்டணம், தகுதி, மேற்கண்ட படிப்புகளுக்கான அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் போன்ற தகவல்கள் www.tnhealth.tn.gov.in – என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட உரிய தகவல் தொகுப்பேட்டில் கிடைக்கப் பெறும்.
மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய தகவல் தொகுப்பேட்டினை படித்து அதில் தெரிவித்துள்ளவாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட உரிய விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து உடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர்,
தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரியில் 18.01.2022 பிற்பகல் 5.30 மணி அல்லது அதற்கு முன் வந்தடையுமாறு சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக, கடைசி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது. கலந்தாய்வின் போது நடைமுறையில் உள்ள இனசுழற்சி விதிமுறைகள் மற்றும் ஆணைகளின்படி பின்பற்றப்படும்."
இவ்வாறு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT