Published : 24 Dec 2021 05:53 PM
Last Updated : 24 Dec 2021 05:53 PM

நல்லிணக்கத்தை போதிக்கும் நன்னாள் - தமிழக ஆளுநர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

கோப்புப் படம்

சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: "மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த என்னுடைய அனைத்து சகோதர - சகோதரிகளுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர - சகோதரிகளுக்கு என்னுடைய உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித நேயத்தைக் காப்பதற்காகவே இப்பூவுலகில் அவதரித்து, பல்வேறு இன்னல்களைத் தாங்கிய புனித இயேசு கிறிஸ்து பிறந்த நன்னாளைப் போற்றும் வகையில் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடப்படுகிறது. குன்றாத அன்பையும் மன்னிப்பையும் நமக்குப் பரிசாகத் தந்தவர் இயேசு. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை உணர்த்தும் வகையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நமக்குப் போதிக்கும் நன்னாள் இத்திருநாளாகும்.

இத்தருணத்தில், இயேசு கிறிஸ்துவின் போதனைகளை முழுமையாக நாம் கடைப்பிடிப்போம்; நம்மைக் காட்டிலும் வறியவர்களிடத்தே கருணை புரிவோம்; அமைதி, பொறுமை மற்றும் நல்லிணக்கம் என்னும் வலுவான அடித்தளத்தில் சிறப்பான உலகைக் கட்டமைக்க நம்மால் இயன்ற வகையில் பங்காற்றுவோம். இத்திருநாள் நம் வாழ்வில் எல்லையற்ற மகிழ்ச்சியை வாரி வழங்கட்டும். நாம் அனைவரும் உரிய ‘கோவிட்’ வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடுவோம்" என்று வாழ்த்துச் செய்தியில் தமிழக ஆளுநர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: "உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு" என ஈகையையும்; "ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு" என சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையையும்; எதிரிகளையும் நேசியுங்கள், பகைவருக்கும் நன்மை செய்யுங்கள்" என எக்காலத்தும் போற்றத்தக்க உயர்ந்த அன்பையும் போதித்த மனித நேய மாணிக்கம் இயேசு பிரான் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள கிறித்துவ மக்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.

அன்பும் அமைதியும் அனைவரது வாழ்விலும் தவழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இவ்விழா கொண்டாடப்படுவதுடன், அன்பினை பரிமாறிக்கொள்ள ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களையும்; ஏழை எளியோருக்கு உதவிகளையும் வழங்கி மகிழ்கின்றனர். அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கை இந்நாளில் மிளிர்வதைக் காண்கிறோம்.

தமிழக கல்வி வளர்ச்சியிலும் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றிய கிறித்துவ மக்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் திராவிட முன்னேற்றக் கழகமும் கழக அரசும் என்றைக்கும் தோளோடு தோள் சேர்ந்து துணை நின்றிருக்கிறது. அதேவழியில் தொடர்ந்து பயணித்துச் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நமது அரசு பாதுகாக்கும்.

மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடப்படும் இந்த விழாவை கரோனா காலக் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனி மனித இடைவெளியைக் கடைபிடித்து, பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டு, என் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x