Published : 24 Dec 2021 05:32 PM
Last Updated : 24 Dec 2021 05:32 PM

எவ்வகையான குற்றங்கள் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வரும்? - தெளிவு தரும் வழக்கறிஞர் அஜித்தா

2020-ம் ஆண்டில் போக்சோ சட்டத்தில் பதிவான குற்றங்களில் 99 சதவீத எண்ணிக்கையில் பெண் குழந்தைகளுக்கு எதிரானவையாக உள்ளன. இதன் மூலம் சமூகத்தில் அதிகமாக பாதிக்கப்படும் பிரிவில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தது. இந்த நிலையில் போக்சோ சட்டத்தை குறித்து அறிவது அவசியமாகிறது.

குழந்தைகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வழக்கறிஞர் அஜித்தா, போக்சோ சட்டம் குறித்து விரிவான தகவல்களை 'இந்து தமிழ் திசை'யிடம் பகிர்ந்து கொண்டார். அவர் தெளிவாக விவரிக்கும்போது, “குழந்தைகளுக்கான உரிமைகள் என இந்தியாவில் பல சட்டங்கள் உள்ளன. குறிப்பாக CRC (Child Right Convention). CRC அடிப்படையில்தான் குழந்தைகளுக்கான உரிமை வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் நான்கு முக்கிய சட்டங்கள் நம் நாட்டில் குழந்தைகளுக்காக உள்ளன. குழந்தைத் திருமண தடை சட்டம், குழந்தை தொழிலாளர் தடை சட்டம், கல்வி உரிமை சட்டம், இறுதியாக போக்சோ சட்டம்.

போக்சோ சட்டம் 2012-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம்தான் போக்சோ சட்டம். இதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கென சிறப்புச் சட்டங்களை கொண்டு வரலாம் என்றும் நமது அரசியலைப்பு சட்டம் கூறுகிறது.

போக்சோ பற்றிய குழப்பம் அனைவருக்கும் உள்ளது. இச்சட்டத்தினை எவ்வாறு நம் குழந்தைகளுக்கு பயன்படுத்துவது என்ற அச்சம் அனைத்து பெற்றோருக்கும் உள்ளது. குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசுவதற்கு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இன்னமும் தயக்கம் உள்ளது. போக்சோ சட்டம் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் அனைத்து குற்றத்திற்கும் கிடையாது. எடுத்துகாட்டுக்கு ஆசிரியர் என் குழந்தையை தாக்கிவிட்டார் என்பதெல்லாம் போக்சோ சட்டத்தின் கீழ் வராது.

குழந்தைகளை பாலியல் துன்புறுத்ததிலிருந்து காப்பதுதான் போக்சோ சட்டம். குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை என அனைத்துமே பாலியல் துன்புறுத்தல்தான் . குழந்தையின் நம்பிக்கையை பயன்படுத்தி குழந்தை மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் கடும் குற்றமாக பார்க்கப்படுகிறது. அது பெற்றோர், உறவினர், ஆசிரியர், மருத்துவர், காவலர் என அனைவருக்கும் பொருந்தும்.

போக்சோ சட்டத்தில் பாலியல் வன்முறைகளை மூன்று விதமாக பிரித்து இருக்கிறார்கள். போக்சோ சட்டம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் இரு பாலினருக்கும் பொருந்தும் சட்டம். ஆண், பெண் என்ற வேறுபாடில்லை. போக்சோ சட்டம் வருவதற்கு முன்னர் ஆண் உறுப்பு, பெண் உறுப்பில் நுழைத்தால் மட்டுமே பாலியல் குற்றமாக பார்க்கப்பட்டது. போக்சோ வந்த பிறகுதான் அனைத்து பாலியல் துன்புறுத்தலுமே குற்றமாக பார்க்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலமே குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க கூடிய வாய்ப்பும் அமைந்தது. எனவே, குழந்தைகளை மீதான பாலியல் துன்புறுத்தல்களை பேசும்பொருளாக பெற்றோர் மாற்றும்போதுதான் விழிப்புணர்வு கொண்ட சமூகமாக மாறும்” என்றார்.

போக்சோ குறித்த விரிவான தகவல்கள் வழக்கறிஞர் அஜித்தாவின் வீடியோ பேட்டி இது > குழந்தைகளுக்கு எதிரான இந்த குற்றங்களுக்கு நாம் தான் காரணம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x