Published : 24 Dec 2021 01:23 PM
Last Updated : 24 Dec 2021 01:23 PM
சென்னை: விவசாயிகள் சங்கத் தலைவர் என்ற போர்வையில் பி.ஆர்.பாண்டியன் மத்திய அரசின் ஊதுகுழலாகவே செயல்படுகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக அரசு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்குக் கீழே இரண்டு மாநிலங்களும் நீரைப் பகிர்ந்து கொள்கிற பிலிகுண்டுலுவிற்கு மேலே 4 கி.மீ. தொலைவில் மேகதாதுவில் அணை கட்டுவது, வருகிற நீரின் போக்கை அப்பட்டமாகத் தடுத்து நிறுத்தக்கூடிய செயலாகக் கருதி, தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.
மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலமாகத் தமிழகத்தின் உரிமையைப் பறிக்கின்ற முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருக்கிறது. தற்போது மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால் காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாற வழிகோலுமென தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், விவசாய சங்கங்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால், தமிழக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக 2018-ல் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது 2019 நவம்பர் 22-ம் தேதி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், மத்திய அரசு தமிழக நலன்களைத் தாரை வார்க்கிற வகையில் கர்நாடக அரசின் சூழ்ச்சி திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதியும் வழங்கியது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றின் படி, காவிரி ஆற்றில் எத்தகைய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதாக இருந்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறது. ஆனால், கர்நாடக பாஜக அரசு தமிழக நலன்களுக்குக் கேடு விளைவிக்கின்ற வகையில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று பேசுவது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகமே ஓரணியில் திரண்டு போராடிக் கொண்டிருக்கும்போது, கர்நாடகத்தில் காங்கிரஸ் பேரணி நடத்தியதைக் கண்டித்து பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஜனவரி 16-ல் பூம்புகாரில் தொடங்கி, கிருஷ்ணகிரி ராசி மணலில் முடிவடைகிற வகையில் வாகனப் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுகிறது கர்நாடக அரசு. அங்கே எதிர்க்கட்சியான காங்கிரஸ் பேரணி நடத்தும்போது தமிழகத்தில் காங்கிரஸுக்கு எதிர் பேரணியை நடத்துவது பிரச்சினையை திசை திருப்புகிற செயலாகும்.
விவசாயிகளின் நலனில் உண்மையிலேயே பி.ஆர்.பாண்டியனுக்கு அக்கறை இருக்குமேயானால், மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து பேரணி நடத்த வேண்டுமே தவிர, கர்நாடகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கிற காங்கிரஸை எதிர்த்து தமிழகத்தில் பேரணி நடத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
விவசாயிகள் சங்கத் தலைவர் என்ற போர்வையில் பி.ஆர்.பாண்டியன் மத்திய அரசின் ஊதுகுழலாகவே செயல்படுகிறார். தமிழக விவசாயிகள் நலனைப் பாழடிக்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாஜக, அதிமுகவிற்கு ஆதரவாக கடந்த தேர்தல்களில் பரப்புரை மேற்கொண்ட பி.ஆர். பாண்டியன், விவசாயிகளின் சார்பாக பேசுவதற்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லை.
பச்சைத் துண்டு போட்டதனாலேயே பி.ஆர்.பாண்டியன் விவசாய சங்கத் தலைவராக ஆகிவிட முடியாது. மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று பி.ஆர்.பாண்டியன் கருதினால், அதற்கு தமிழக அரசு எடுக்கிற முயற்சிகளுக்குத் துணை நிற்க வேண்டுமே தவிர, அந்த முயற்சிகளை பலவீனப்படுத்துகிற நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்ப்பது தமிழகத்தின் நலனுக்குத் துணை புரிவதாக இருக்கும்" என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT