Published : 24 Dec 2021 10:13 AM
Last Updated : 24 Dec 2021 10:13 AM

சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம்: வைகோ கிறிஸ்துமஸ் வாழ்த்து

கோப்புப் படம்

சென்னை: மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் நன்னாள், மனித குமாரனாக மண்ணில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த புனித குமாரனின் வருகையைப் போற்றி உலகமே கொண்டாடும் திருநாள். நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று ஆறுதல் கூறி துன்பத்தில் துடித்தோரை அரவணைத்தவர் ஏசுபெருமான்.

ஒருவனின் தாய் மகனைத் தேற்றுவதைப் போல நான் உன்னைத் தேற்றுவேன் என்று பேசியவர், “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” என்று உடைந்த உள்ளங்களுக்கு நம்பிக்கையை விதைத்தவர் ஏசுபெருமான்.

கிறித்தவப் பாதிரியார்களும், பெருமக்களும் செந்தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றினர். திராவிட மொழிகளின் மூல மொழி தமிழ் என்பதை ஆதாரங்களோடு கால்டுவெல் நிலைநாட்டினார். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை அரவணைத்துக்கொண்டு ஆறுதல் வழங்கினார்கள்.

ரட்சகர் ஏசுபெருமான் மலைமேல் நின்று அமுதமொழிகளாகப் பொழிந்த கருத்துக்கள் மோதல்களும், அக்கிரமங்களும், சுயநலப் பேராசையும், அலைக்கழிப்பும் கொண்ட இன்றைய உலகத்துக்கு நல்வழி காட்டுகின்றன. சாந்த குணம் உள்ளவர்களாக, நீதியின்மேல் பசி தாகம் உள்ளவர்களாக சிறுமைப்படுகின்றவர்களுக்கு இரக்கம் உள்ளவர்களாக, இருதயத்தில் சுத்தம் உள்ளவர்களாக நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்களாக வாழ வேண்டும் என்றும், அப்படி வாழ்கின்றவர்கள் உலகத்துக்கு வெளிச்சமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதை ஏற்று வாழ்ந்த உத்தமர்கள் அவற்றை மெய்யாக்கி இருக்கிறார்கள்.

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கலவரங்களும், ரத்தக் களறிகளும் மனித சமுதாயத்திற்குப் பேராபாயமாக அச்சுறுத்தும் ஆபத்திலிருந்து விடுபடுவதற்கு ஏசுநாதரின் அறிவுரைகள் மிகவும் இன்றியமையாதவை ஆகும். சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தியபோதும், அன்பின் சிகரமாகவே திகழ்ந்தார்.

மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, கிறித்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்."

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x