Published : 24 Dec 2021 11:09 AM
Last Updated : 24 Dec 2021 11:09 AM
நீலகிரி மாவட்டத்தில் பெருமழை, தீ, நிலச்சரிவு என அனைத்து நேரங்களிலும் இரவு, பகல் பாராமல் தங்களுடைய பணியை திறம்படச்செய்து, மக்களுக்கு சேவை செய்துவருகின்றனர் தீயணைப்புத் துறையினர். வழக்கமாக, தமிழ்நாட்டின் சமதள பரப்பிலுள்ள தீயணைப்புத் துறையினர், மழை மற்றும் தீ விபத்துஎன அவ்வப்போது ஏற்படும் பேரிடரின்போதுதான் அதிகமான பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும்.
ஆனால், மலைப் பிரதேசங்களிலுள்ள தீயணைப்புத் துறையினரோ, எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால், ஓய்வெடுக்க ஒரு நல்ல ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர், நீலகிரி மாவட்ட தீயணைப்புத் துறையினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கூடலூர் கோட்டங்களிலுள்ள தீயணைப்பு நிலையங்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. குன்னூர் பேருந்து நிலையத்திலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். கடந்த 8-ம் தேதி குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரத்தில் முப்படைகளின் தளபதி உட்பட14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது, சம்பவ இடத்தில் கிராம மக்களின் உதவியுடன், 2பேரை உயிருடன் குன்னூர் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.அந்த இருவரும் தற்போது உயிரிழந்துவிட்டாலும், தீயணைப்புதுறையினரின் சேவையை ராணுவம், விமானப்படை உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டினர். ஆனால், தீயணைப்பு வீரர்களுக்கான ஓய்வறை, கழிவறை, அலுவலகம் உள்ளிட்டவை சுமார் 40 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. மழைக் காலங்களில் ஒழுகும் அறையில் ஓய்வெடுக்க முடியாமலும், அசுத்தமான கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில்தீத்தடுப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக, 1980-ம் ஆண்டு கூடலூர்பழைய நீதிமன்ற சாலையில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது, தீயணைப்பு நிலையப் பயன்பாட்டுக்காக, தற்காலிகமாக தகர கொட்டகை அமைக்கப்பட்டது. கடந்த 41 ஆண்டுகளாக, பாதுகாப்பு இல்லாத அதே தகர கொட்டகை செட் தான் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, 2 சிறியவாகனம் உட்பட மூன்று தீயணைப்புவாகனங்கள் உள்ளன. 11 தீயணைப்பு வீரர்கள் பணிபுரிகின்றனர். 10 பணி இடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து, குடியிருப்புகளில் பாம்பு புகுந்தால் மீட்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீயணைப்பு நிலையத்தின் மேற்கூரை தகரத்திலும், செட்டை சுற்றி தகரம், பிளாஸ்டிக், பழைய ‘டிஜிட்டல்' போர்டுகள் கொண்டும் மறைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானலும் விழும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் தீயணைப்பு நிலையங்களை நவீனப்படுத்துவதாக மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், இங்குள்ள தீயணைப்பு நிலையத்தின் நிலை, பணிபுரியும் வீரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர்கள்கூறும்போது, "நீலகிரி மாவட்டத்துக்கு தனியாக மாவட்ட அலுவலர் பணியிடம் இல்லாமல் இருந்தது. நீலகிரி மாவட்டம் தனிக்கோட்டமாக அறிவிக்கப்பட்டு, மாவட்ட அலுவலர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்திலுள்ள தீயணைப்புநிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு, வட்டாரப் போக்குவரத்து கிளை அலுவலகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டுக்குள் அங்கு தீயணைப்பு நிலையம் கட்டப்படும். மேலும்,உதகை, குன்னூர் தீயணைப்பு நிலையங்களையும் மேம்படுத்த ஒப்புதல்பெறப்பட்டுள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment