Published : 23 Dec 2021 10:41 PM
Last Updated : 23 Dec 2021 10:41 PM
நாகர்கோவில்: கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் மீதான திமுகவினரின் தாக்குதல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தன்இயல்பாக மேடைகளில் அவதூறு பேசியதை எதிர்த்ததாக அப்பகுதியில் உள்ள திமுகவினர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் கூட, கருத்துக்கு கருத்துதான் எடுத்து வைக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என்றே நினைக்கிறேன். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
தருமபுரியில் நடந்தது என்ன? சில தினங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், பேச்சாளரை மேடையிலேயே கடுமையாகத் தாக்கியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத்தான் திருமாவளவன், கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, அதிமுக அமைச்சர்கள் மீதான ரெய்டுகள் தொடர்பான கேள்விக்கு, "இதில் காழ்ப்புணர்ச்சி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவரே அதிமுக பிரமுகர்தான். அதனால், புகார்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக உணர்கிறேன்" என்றார்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் அளித்தப் பேட்டியில், "பெண்ணின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற மசோதாவை சாதி மறுப்புத் திருமணம், மத வெறுப்புத் திருமணங்களை எதிர்க்கக் கூடியவர்கள்தான் வரவேற்கின்றனர். பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை நிறைவேற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT