Published : 23 Dec 2021 06:11 PM
Last Updated : 23 Dec 2021 06:11 PM
கடலூர்: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் இன்று திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி கீழ்ச்செறுவாயில் 2,580 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட வெலிங்டன் நீர்த்தேக்கம் உள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த நீர் மட்ட உயரம் 29.71 அடி. இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் வட்டங்களில் 23 ஏரிகளும், 63 கிராமங்களில் கீழ்மட்டக் கால்வாய் மூலம் 9,209 ஏக்கர் நிலமும், மேல்மட்டக் கால்வாய் மூலம் 14,850 நிலமும் என 24,059 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.கடந்த இரு மாதங்களாக பெய்த கனமழையால் நீர்த்தேக்கத்தில் 1,905 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
தற்போது சம்பா சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் வெலிங்டன் நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டார்.
அப்போது பேசிய அமைச்சர், "விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து கீழ்மட்டக் கால்வாயிலிருந்து வினாடிக்கு 200 கன அடி வீதம் 120 நாட்களுக்கு 1,140 மில்லியன் கன அடியும், மேல்மட்டக் கால்வாயிலிருந்து 80 நாட்களுக்கு 622.08 மில்லிடன் கன அடி என மொத்தம் 1,762.56 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று தான் தண்ணீர் திறந்து வைத்தேன். வெலிங்டன் நீர்த் தேக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
மேலும், வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரையைப் பலப்படுத்த ரூ.75 கோடியும், தூர்வார ரூ.120 கோடியும் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதிக்குப் பின் அந்த பணிகள் துவங்கி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT