Published : 23 Dec 2021 04:50 PM
Last Updated : 23 Dec 2021 04:50 PM
சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிய 12,000 உடல் வெப்ப பரிசோதனை கருவிகளை முன்களப் பணியாளர்களுக்கு வழங்கிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள 34 பேருக்கும் முதல் நிலை அறிகுறிகள் தலைவலி, தொண்டை அடைப்பு போல மிதமான பாதிப்புதான்" என்றார்.
இது குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிய தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் 12,000 உடல் வெப்ப பரிசோதனை கருவிகளை (Thermal Scanner) முன்களப் பணியாளர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் இருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரையும் வீடு தேடி சென்று ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் பிற முக்கிய நோய்கள் தொடர்பாக பரிசோதிக்கவும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோயாளிகளுக்கு வீட்டிலேயே மருந்து வழங்கிடவும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி வைத்தார்.
கரோனா இரண்டாம் அலை உச்சக்கட்டத்தில் இருந்து வந்த சூழ்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அக்கடினமான பேரிடர் சூழலிலிருந்து மாநிலம் மீள்வதற்கு தனியார் நிறுவனங்களையும், தொண்டு நிறுவனங்களையும் தாராளமாக உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன், இதை மக்கள் பேரியக்கமாக மாற்ற தங்களை இணைத்து கொள்ள வேண்டும் என்று கோரினார்.
அதற்கிணங்க இன்று (23.12.2021) தேசிய நலவாழ்வு குழுமத்தில் நடைபெற்ற விழாவில் ஹோப் திட்டம் (Project Hope) மற்றும் சார்டு (SARD) ஆகிய தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் ரூபாய் ஒரு கோடியே ஐம்பது லட்சம் மதிப்பிலான 12,000 உடல் வெப்ப பரிசோதனை (Thermal Scanner) செய்யும் கருவிகள் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகளில் ஒன்றான 'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலனை பாதுகாக்க மக்கள் நல பதிவு' (Population Health Registry) என்னும் தகவல் இயங்குதளம் உருவாக்கப்படும்' என்றாகும். இந்த அறிவிப்பினை தொடர்ந்து இன்று வரை 6.57 கோடி தமிழ்நாட்டு மக்களுக்கு தனி நபர் சுகாதார அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார பெண் தன்னார்வலர்கள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்துகள் வழங்குவதோடு, வீட்டிற்கே சென்று சுகாதார பரிசோதனைகள் மற்றும் மக்கள் நல பதிவின் தகவல்களை சரிபார்க்கும் பணியை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் வழங்குவதன் மூலம் மற்ற பரிசோதனைகளுடன் காய்ச்சல் அறிகுறிகளையும் கண்டறிய உதவியாக இருக்கும். இத்திட்டத்தின் முன்னோட்டம் கண்டமங்கலம் வட்டாரம் விழுப்புரம் மாவட்டத்தின் செயல்படுத்தப்பட்டு இதுவரை 66,700 பேர் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் நல பதிவு பணிக்கான முன்னோட்டத்தில் (pilot) சிறப்பாக பங்களித்த ஐந்து பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மக்கள் நல பதிவினை தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் டெக் மஹிந்திரா (tech mahendra), திமாகி (dimagi), இலாட்டிஸ் (lattice), டைம்ஸ்மெட் (timesmed) ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பு (consortium) தேசிய நல குழுமத்துடன் இணைத்து பணிபுரிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் ஓமைக்ரான் நிலவரம்: வெளிநாடுகளில் வந்த குறைந்த தொற்று வாய்ப்புள்ள நாடுகள் (non risk countries) மற்றும் அதிக பாதிப்புள்ள நாடுகள் (high risk countries) இருந்த வந்தவர்களுக்கு பரிசோதனைகளின் எண்ணிக்கை 18,129 ஆகும். அதில் 114 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 57 பேருக்கு (S – gene drop) S வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களின் மாதிரிகள் அனைத்தும் பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், அவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என 104 பேருக்கு தமிழகத்தில் S வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மத்திய அரசு வைராலஜி ஆய்வுக் கூடத்தில் 60 பேர் மாதிரி சோதிக்கப்பட்டு 34 நபர்களுக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. அதில் 30 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். பாதிக்கப்பட்டுள்ள 34 பேருக்கும் முதல் நிலை அறிகுறிகள் தலைவலி, தொண்டை அடைப்பு போல மிதமான பாதிப்புதான். மேலும், மாதிரி அனுப்பப்பட்ட 57 பேரில் 34 பேருக்கு முடிவு வந்துள்ளது, மேலும் 23 நபர்களின் முடிவுகள் நாளை வெளியாகக் கூடும்.
18 வயதுக்கு கீழான இருவர் தவிர எஞ்சிய ஒமைக்ரான் தொற்றாளார் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நாம் மேற்கொண்ட பரிசோதனையில் S வகை மாறுபாடு கண்டறியப்பட்டதன் மூலம் ஏறக்குறைய இவர்களுக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதாகவும், மத்திய அரசு வைராலாஜி ஆய்வுக் கூடம் மூலம் முடிவு வந்த நிலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
S வகை பாதிப்புக்குள்ளானோர் இன்றைய நிலவரத்தின்படி 79 அரசு மருத்துவமனைகளிலும், 12 தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அவர்களில் 23 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்ப உள்ளதாகவும், அனைவரும் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT