Published : 23 Dec 2021 03:21 PM
Last Updated : 23 Dec 2021 03:21 PM

காய்கறி விலை முதல் பொருளாதார நிலை வரை காட்டும் 'முதலமைச்சர் தகவல் பலகை'யை திறந்துவைத்தார் ஸ்டாலின்

சென்னை: காய்கறி விலை முதல் பொருளாதார நிலை வரையிலான தகவல்களுடன் அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை தெரிந்துக் கொள்ளும் வகையில் ’முதலமைச்சர் தகவல் பலகை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.23) தமிழ்நாடு அரசினுடைய முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த முதலமைச்சர் தகவல் பலகையை (Dash board) தலைமைச் செயலகத்தில் திறந்துவைத்தார். முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 16-ல் நடைபெற்ற அனைத்துத் துறை செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், "அனைத்துத் துறைகளின் திட்டங்களை செயல்படுத்தப்படுவது குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளும் விதமாகத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் 'ஆன்லைன் தகவல் பலகை' (Dash Board) ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் முக்கிய தகவல்களை தினமும் பார்வையிட்டு, அரசு அளித்துள்ள வாக்குறுதிகள், வெளியிட்டுள்ள அறிவிப்புகள், அரசின் முக்கிய செயல் திட்டங்கள் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு எனத் தமிழக மக்களுக்கு ஒரு நல்லாட்சியை வழங்கிடும் வகையில் அனைத்து தகவல்களும் “தகவல் பலகையில்” இடம்பெறும். அந்தத் தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

அதன்படி, நிகழ் நேர தகவல், முறையான கண்காணிப்பு, அரசின் செயல்திறன் அதிகரிப்பு, தாமதங்களை குறைத்தல் மற்றும் உடனடி முடிவுகள் எடுத்தல் ஆகியவற்றின் தேவையை உணர்ந்து, தகவல் பலகையை உருவாக்கிட தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் (மின்னாளுமையை எளிமையாக்கல்) பி.டபிள்யூ.சி. டேவிதார், இ.ஆ.ப (ஓய்வு) தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த முதலமைச்சர் தகவல் பலகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய நீர் தேக்கங்களின் கொள்ளளவு மற்றும் இதுநாள் வரையிலான நீர் இருப்பின் நிலை; ·மழைப் பொழிவு முறை; 25-க்கும் மேற்பட்ட உணவு தானியங்கள் / காய்கறிகள் / பழங்கள் ஆகியவற்றின் விலை நிலவரம் மற்றும் திடீர் விலை உயர்வின் சாத்தியக் கூறுகளை கண்காணித்து, தீர்வு காண உதவும் விலைத் தளம் (Price Mesh).

வேலைவாய்ப்பு களநிலவரங்களைக் கொண்டு தற்போதைய பொருளாதார நிலையை கண்டறிதல்; நுகர்பொருள் வாணிபத் தகவல்; 'முதலமைச்சர் உதவி மையம்' மற்றும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' வாயிலாக பெறப்பட்ட மனுக்களின் தற்போதைய நிலை மற்றும் தீர்வுகள் குறித்த முழுத் தகவல்கள்; முதல்வர் ஸ்டாலினால் கண்காணிக்கப்படும் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள்; மாநிலத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள், அவற்றில் அதிக கவனம் தேவைப்படும் மாவட்டங்கள், குறித்த காவல் துறையின் தினசரி அறிக்கைகள்; நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களுக்கான வீட்டு வசதி திட்டங்களின் நிலை; குடிநீர் வழங்கல் திட்டங்கள் - குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் குறித்த தகவல்கள் இடம்பெறும்.

இவை அனைத்தும் தகவல் பலகையின் முதல் தொகுப்பில் அடங்குகின்றன. முதல்வர் ஸ்டாலின் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்த முழுமையான தகவல்களை அறிந்து, அவற்றை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் விதத்தில் வாரந்தோறும் கூடுதல் தகவல்கள் இப்பலகையில் சேர்க்கப்படும். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தகவல் பலகைகளின் நோக்கத்தை விளக்கும் காணொலி வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் தங்கராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் (மின்னாளுமையை எளிமையாக்கல்) டேவிதார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x