Published : 23 Dec 2021 12:47 PM
Last Updated : 23 Dec 2021 12:47 PM
சென்னை: அம்பத்தூர் ஆவின் பால்பண்ணை வளாகத்தில் அமைக்கப்பட்ட எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் ஆவின் நிறுவனம் சிறப்புடனும், லாப நோக்கத்துடனும் செயல்பட உத்தரவிட்டுள்ளார். அதன்படி பால்வளத்துறை அமைச்சர் நாசரின் வழிகாட்டுதல்படி ஆவின் நிறுவனம் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது. இதன் தொடர் நிகழ்வாக இன்று சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆவின் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில், ஆவின் பால்பண்ணை வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம், பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் கட்டிடம், இயந்திரம், சாலை வசதி, சுற்றுச்சுவர் உட்பட அனைத்து செலவீனங்களையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஏற்றுக்கொண்டு, ‘ஆவின் சில்லறை விற்பனை’ நிலையத்தினை இயக்கிட மற்றும் பராமரித்திடும் பொறுப்பினை ‘ஆவின்’ இணையம் வழி நடத்திட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆவின் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தில், சென்னை ஆவின் இணையத்தின் வாகனங்கள், சென்னை பெருநகரப் பால்பண்ணைகளில் இயங்கி வரும் பால் பாக்கெட் ஒப்பந்த வாகனங்கள், மாவட்ட ஒன்றிய வாகனங்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய ஒப்பந்த வாகனங்கள், ஒன்றிய பால் டேங்கர் ஒப்பந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஒரு சிறிய அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் சில்லறை விற்பனை நிலையம் நாளொன்றுக்கு 4,000 லிட்டர் பெட்ரோல், 6,000 லிட்டர் டீசல் மற்றும் ஆயில் போன்றவை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆவின் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தில், விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் போன்ற எரிபொருள்களின் தரம் மற்றும் அளவு என்றும் நிரந்தரமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், ஆவின் அரசு உயர் அதிகாரிகள், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT