Published : 23 Dec 2021 12:41 PM
Last Updated : 23 Dec 2021 12:41 PM
உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை விசாரணையில் இதுவரை 150 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும் என்றும் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். மேலும், வழக்கு தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் மட்டுமே ஆஜராகியிருந்தனர். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கிறஞர் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர்.
கோடநாடு வழக்கு விசாரணையில் இதுவரை 150 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும் என்றும் வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் சாட்சிகளிடையே விசாரணை நடத்த அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் மறு விசாரணையை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.
இந்நிலையில் வாளையாறு மனோஜ், ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால், மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT