Published : 26 Mar 2016 03:51 PM
Last Updated : 26 Mar 2016 03:51 PM
சுவிட்சை இயக்காமல் தானாகவே டிஜிட்டல் ரீடிங் மின் மீட்டர்கள் சுழலுவதால் கூடுதல் மின்சாரத்துக்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதாக நெசவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஜக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக் கின்றனர். இவர்கள் தமிழக அரசின் இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்காக மின்மோட் டாரில் இயங்கும் விசைத்தறி மூலம் சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
நெசவாளர் நலனுக்காகவும், உற்பத்தி மின்சாரச் செலவினை குறைக்கவும், கடந்த திமுக ஆட்சியில் 2 மாதத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு நெசவாளர் வீடுகளுக்கும் தலா 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.
இது அதிமுக ஆட்சியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெசவாளர்கள் வீடுகளில் மின்சார செலவு குறித்து கணக்கீடு செய்ய அமைக்கப்பட்டிருந்த ரீடிங் மீட்டர் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக, தற்போது டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், சுவிட்சை இயக்காமலேயே இந்த டிஜிட்டல் மின்மீட்டர் தானாகச் சுழலுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஜக்கம்பட்டி நெசவாளர் சிலர் கூறியதாவது: டிஜிட்டல் மின்மீட்டார் பொருத்தினால், கணக்கெடுப்பின்போது மின் பயன்பாடு துல்லியமாக தெரியவரும் என்று மின்வாரிய ஊழியர்கள் கூறி, கடந்த ஒரு மாதமாக வீடுகளில் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தப்பட்ட பல வீடுகளில் மின் சாதனப் பொருட்கள் பயன்படுத்தாத நிலையில், மீட்டர் தானாகச் சுழன்று வருகிறது. நெசவாளர் சங்கம் சார்பில் மாதந்தோறும் கார்த்திகை நாளன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் விசைத்தறி இயக்கப்படுவதில்லை, மேலும், அன்றைய தினத்தில் (13-ம் தேதி) பல வீடுகளில் டிவி, மின்விசிறி, மின்விளக்கு என எந்த மின்சாதனப் பொருட்களும் பயன்படுத்தாத நிலையில், 5 யூனிட் வரை மின்சாரம் செலவாகி இருந்தது. இதனை கண்டறிய, சிலர் நேற்று அனைத்து மின்சாதனப் பொருட்களையும் இயக்காமல் ரீடிங் மீட்டரை கண்காணித்தபோது அது தானாக சுழன்று கொண்டிருந்தது தெரியவந்தது. இப்படி தானாகவே ரீடிங் மீட்டர் ஓடினால் அரசு வழங்கும் இலவச மின்சாரம் பற்றாமல் கூடுதல் மின்சாரத்துக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நெசவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றார்.
இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது டிஜிட்டல் ரீடிங் மீட்டரில் பிரச்சினை இருந்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆண்டிபட்டி மின்வாரிய செயற்பொறியாளரிடம் புகார் மனு தரலாம். புகாரை பெற்று புதிய டிஜிட்டல் ரீடிங் மீட்டர் மாற்றி தரப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT