Published : 23 Dec 2021 08:44 AM
Last Updated : 23 Dec 2021 08:44 AM
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதிக்கு கவிக்கோ விருது, பட்டயத்துடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வழங்கிப் பாராட்டினார்.
வேலூரில் கவிக்கோ அறக் கட்டளை மற்றும் தமிழியக்கம் சார்பில் இணைந்து கவிக்கோ விருது விழா மற்றும் கவியருவி அப்துல் காதர் நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தரும் தமிழியக்க நிறுவனத் தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். கவிக்கோ அறக்கட்டளையின் பொருளாளர் வெ.சோலைநாதன் வரவேற்றார். அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் அஜீம் விருந்தினர்களை கவுரவித்தார். செயலாளர் அயாஸ் பாஷா பட்டயம் வாசித்தார்.
பாவலர் அறிவுமதி, கண் மருத்துவர் முகமது சயீ, கவிக்கோ அறக்கட்டளையின் தலைவர் எஸ்.சையது அஸ்ரப், எழுத்தாளர் ஜே.வி.நாதன், புலவர் பதுமனார், மு.சுகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவியருவி அப்துல் காதர் பாராட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியில் கவிக்கோ விருது, பட்டயத்துடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதிக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வழங்கி பாராட்டிப் பேசும்போது, ‘‘நாட்டி லுள்ள ஏற்றத்தாழ்வுகளை ஒழிப் பதற்கு கவிஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காற்று, மழை, இயற்கை ஆகியவை பற்றியெல்லாம் எழுதும் கவிஞர்கள், நாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வு களை அகற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நாட்டு மக்களை ஜாதிகளின் பெயராலும், மதத்தின் பெயராலும், கட்சியின் பெயராலும் பிரித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் கலைந்து அனைவரும் சமம் என்ற நிலையில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும், சமுதாய ஏற்றத் தாழ்வுகளை மாற்றவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
திராவிட தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், ‘‘கவிஞர்களும், சிந்தனையாளர்களும் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்துக்கு ஏற்ப நவீன அறிவியலை நாம் ஊக்குவிக்க வேண்டும். நாமும் நவீன விஞ்ஞானத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். இதைப்பற்றிய சிந்தனைகளையும் விழிப்புணர்வுகளையும் கவிஞர்கள் ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
இறுதியாக கவிக்கோ விருது பெற்ற பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி ஏற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில், கவியருவி அப்துல் காதர் எழுதிய ‘கம்பன் கவி ஈர்ப்பு மையம்’ என்ற நூலை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட தமிழியக்கத்தின் மாவட்டச் செயலாளர்கள் மாதவ.சின்ராஜ், தொழிலதிபர் அக்பர் ஷரிப், கோட்டீஸ்வரன், லட்சுமணன், சீனிவாசன், ஆற்காடு ஜோதி அபிராமி கல்லூரியின் தலைவர் ஜோதி குமார், செஞ்சி அஷ்ரப் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் பேராசிரியர் சேமுமு முகமது அலி நூலைத் திறனாய்வு செய்தார்.
நிகழ்ச்சியின் முடிவில், பதிப்பாளர் ஷாஜகான் நன்றி தெரிவித்தார். செஞ்சி அஸ்ரப், பேராசிரியர் அன்பு ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT