Published : 22 Dec 2021 10:00 PM
Last Updated : 22 Dec 2021 10:00 PM

தட்டாமலேயே, கேட்காமலேயே உதவிகளை செய்யும் திமுக அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலேயே, நீங்கள் கேட்காமலேயே உதவியை செய்கிறது திமுக அரசு என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை - பெரம்பூர், டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“உன்மீது நீ அன்பு கூறுவது போல, அடுத்திருப்பவர் மீதும் நீ அன்பு கூறுகிறாய்” என்று இயேசு கிறிஸ்து குறிப்பிட்டு காட்டி இருக்கிறார். அத்தகைய அன்பை பெருக்கும் விழாக்களாக இத்தகைய விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

எனக்கு முன்னால், இந்து மத நம்பிக்கையாளர் ஒருவர் பேசினார். இஸ்லாமியர் இங்கே பேசியிருக்கிறார். ஜெயின் ஒருவர் பேசியிருக்கிறார். நமக்கும் கிறிஸ்துமஸ்-க்கும் என்ன சம்பந்தம் என்று அவர்கள் நினைக்கவில்லை. எல்லா மதங்களின் அடிப்படையும் ஒன்றுதான் என்ற எண்ணத்தோடு தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். நானும் வந்திருக்கிறேன். இதுபோன்ற விழாக்களின் அடிப்படையே ஒற்றுமை, இரக்கம், தியாகம், பகிர்தல் ஆகியவை தான்.

அதனால் தான் இங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நம்முடைய அன்பை பரிமாறிக் கொள்வதன் மூலமாக, அதன் அடையாளமாக உங்களுக்கு தேவையான பொருட்கள் இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.

தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலேயே, நீங்கள் கேட்காமலேயே அந்த உதவியை சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சார்ந்திருக்கும், கொளத்தூர் பகுதியில் இருக்கும் மக்களுக்கு அதை நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதுபோன்ற விழாக்களின் அடிப்படையே கருணைதான். அதனால் தான் கருணையை பெயரில் மட்டுமல்லாமல், குணத்திலும் கொண்டிருக்கும் கலைஞருடைய மகன் இங்கு வந்திருக்கிறேன். உங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லவிருக்கிறேன்.

நடந்து முடிந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று, பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்று திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. இந்த ஆறு மாத காலத்தில் செய்திருக்கக்கூடிய, நிறைவேற்றி இருக்கக்கூடிய திட்டங்கள், எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லவில்லை.

500-க்கும் மேற்பட்ட உறுதிமொழிகளை தேர்தல் அறிக்கையில் எடுத்துச் சொல்லி இருந்தோம். அதில் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றியிருக்கிறோம். எனவே படிப்படியாக மீதமிருக்கும் திட்டங்களை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என்ற அந்த உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

5 மாதத்தில் செய்துவிட்டீர்கள் என்ற நடுநிலையாளர்கள் சொல்லும் அளவிற்கு நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 5 ஆண்டுகளில் செய்யவேண்டியதை 5 மாதத்தில் செய்துவிட்டீர்கள் என்று இன்றைக்குப் பத்திரிக்கையாளர்களும் பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர், கலைஞரை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா, அவர் அடிக்கடி சொல்வார். ‘மக்களிடம் செல், மக்களுடைய உணர்வை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் மக்களுக்காக பணியாற்று’ என்று அடிக்கடி சொல்வதுண்டு.

அதேபோல் மக்களிடம் சென்று, அவர்களோடு இருந்து அனைத்து பணிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து செய்வோம் என்ற அந்த உறுதியை நான் இந்த கிறிஸ்துமஸ் விழாவில் எடுத்துக் சொல்ல விரும்புகிறேன்.

இது சாமானியர்களுடைய இயக்கம் என்று தலைவர் கலைஞர் சொன்னார். அத்தகைய சாமானிய மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் நாம் தீட்டிக் கொண்டிருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் பெரும்பான்மை வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி இருக்கிறோம். அடுத்து வரும் காலகட்டத்தில் அத்தனையையும் நிறைவேற்றுவோம் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எனவே நிறைவேற்றியே தீர்வார்கள் என்ற நம்பிக்கை இன்றைக்கு பொதுமக்களிடத்திலும் வந்திருக்கிறது. அதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். ஏன் இதே தொகுதிக்கு நான் வாரத்திற்கு இருமுறை, மூன்றுமுறை வந்துவிட்டுச் செல்கிறேன். எனவே பார்த்த முகங்கள் தான். பழகிய முகங்கள்தான்.

எனவே எப்போது வந்தாலும் இந்த முகத்தைத்தான் ஏற்கெனவே பார்த்திருக்கிறோமே ஏன் திரும்பப் பார்க்க வேண்டும் என்று நினைக்காமல், சாலை ஓரங்களில் நின்று என்னை வரவேற்கின்ற அந்த காட்சிகளை பார்க்கிறபோது, அந்த பாசத்தை பார்க்கிறபோது, அந்த முகமலர்ச்சியோடு, கையசைத்து, வணக்கம் சொல்லி, கைகாட்டி என்னை வரவேற்கிறபோது அதில் கிடைக்கும் சுகமே எனக்கு ஒரு சுகமாக இருந்துகொண்டிருக்கிறது.

எனவே எந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்பதையும் நான் எண்ணிப் பார்க்கிறேன். இது கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் அதே நிலைதான் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. ஏனென்றால் இந்த ஆட்சியின் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தேர்தல் வாக்குறுதி தந்தோம். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

‘மக்களை தேடி மருத்துவம்’, அது பொதுமக்களிடத்தில் ஒரு நன்மதிப்பை பெற்றிருக்கிறது. அந்த பணி இன்றைக்கு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. சாலை விபத்துகளை சந்திப்பவர்களுக்கு முதல் 48 மணிநேரத்திற்கு ஆகும் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அந்த அறிவிப்பும் இன்றைக்கு பலன் அளித்திருக்கிறது.

எனவே இந்த பட்டியல் நிச்சயமாக தொடரும்.. தொடரும்.. தொடரும்.. என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி இங்கே குழுமியிருக்கும் உங்களுக்கெல்லாம், கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x