Published : 22 Dec 2021 05:22 PM
Last Updated : 22 Dec 2021 05:22 PM

குன்னூரில் ஹெலிகாப்டர் பாகங்கள் சேகரிப்பு: கிராமம் வழியாக செல்ல முடியாததால் மாற்றுப் பாதையை அறிய ஆய்வு

குன்னூர் : குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் பாகங்கள், ராணுவத்தினர் உதவியுடன் சேகரிக்கப்பட்டு, லாரி மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருகே நஞ்சப்பசத்திரத்தில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பயணித்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட இடத்தை ராணுவ கட்டுபாட்டில் கொண்டு வந்து, அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான ஏர் மார்ஷல் மானவேந்தர் சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமான படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்தனர். தமிழக காவல்துறை சார்பில் கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து காரணமாக கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் பரபரப்பாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் மீதமுள்ள பொருட்களை உடைத்து எடுத்து செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் விமான படையினர், ராணுவத்தினர் மற்றும் குன்னூர் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களை சிறிது சிறிதாக வெட்டி, அவற்றை மூட்டையில் கட்டி ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படையினர் உதவியுடன் லாரி மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியுள்ளது.

ஹெலிகாப்டரின் பெரிய அளவிலான பாகங்களை கிராமத்தின் வழியாக தூக்கி செல்ல முடியாது என்பதால் வேறு வழி உள்ளதா என ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். ஹெலிகாப்டரின் என்ஜின் மட்டுமே கிட்டத்தட்ட 1.50 டன் எடையுள்ளது. எனவே, அதனை சுமந்து செல்லும் பணி மிகவும் சிரமம். எஞ்சியுள்ள உதிரி பாகங்களும் எடை அதிகமாக உள்ளது.

ஆகையால் பெரிய அளவிலான பொருட்களை எவ்வாறு கொண்டு செல்வது என்று ராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கலந்தாய்வு நடைபெற்றது. விபத்து நடந்த இடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாட்டுவண்டி சென்று வந்த பாதையாகும். விபத்து நடந்த இடத்தில் இருந்து கீழ் பகுதியில் சுமார் 200 மீட்டர் தொலைவில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. எனவே, அந்த வழியாக அதிக எடையுள்ள பொருட்களை தூக்கி செல்ல முடியுமா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, வனத்துறையினர் உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக வனத்துறையினர் அவ்வழியே உள்ள புதர்களை வெட்டி பாதையை சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறும்போது, ‘விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களை எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகத்தின் உதவியை விமானப்படையினர் கோரினர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளோம்’ என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x