Published : 22 Dec 2021 04:39 PM
Last Updated : 22 Dec 2021 04:39 PM
சென்னை: சீன செல்போன் நிறுவனங்களின் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் நடிகர் விஜய்யின் உறவினரும், 'மாஸ்டர்' பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் பாக்ஸ்கான் தொழிற்சாலை உள்ளது. செல்போன் நிறுவனங்களான ஓப்போ, ரெட்மி மற்றும் பிளாக்பெரி, ஐபோன் போன்ற 9 வகையான செல்போன் நிறுவனங்களுக்கு இங்கிருந்து செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றன. செல்போன் உதிரி பாகங்களை பெற்று அவற்றை முழுமையான செல்போனாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகளை பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்திலேயே ரெட்மி, ஓப்போ போன்ற சீன செல்போன் நிறுவனங்கள் வைத்துள்ளன. பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் செல்போன்கள் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சீன செல்போன் நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில், சீன செல்போன் நிறுவனங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாக்ஸ்கான் தொழிற்சாலையிலும், அதற்குள் இருக்கும் சீன நிறுவனங்களின் தொழிற்சாலையிலும் சுமார் 30 வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி காலையில் இருந்து நேற்று நள்ளிரவு வரை சோதனையில் ஈடுபட்டனர். சென்னை கொட்டிவாக்கம் நேரு நகரில் ‘ஓப்போ’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கும் கடந்த 21-ம் தேதி காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேப்போல டெல்லி, மும்பை, பெங்களூரில் உள்ள சீன நிறுவனங்களின் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
தமிழகத்தில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில், சீன செல்போன் நிறுவனங்களின் உதிரி பாகங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது ‘கெர்ரி லாஜிஸ்டிக்’ என்ற நிறுவனம் என்பது தெரியவந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் 'மாஸ்டர்' பட தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள சேவியர் பிரிட்டோவின் வீடு, மயிலாப்பூர் மற்றும் மண்ணடியில் உள்ள கெர்ரி லாஜிஸ்டிக்ஸ் நிறுவன அலுவலகம் மற்றும் குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர். 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சோதனையின் முடிவில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை ஆய்வு செய்த பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT