Last Updated : 10 Mar, 2016 02:45 PM

 

Published : 10 Mar 2016 02:45 PM
Last Updated : 10 Mar 2016 02:45 PM

கேரள போலீஸார் தொந்தரவு: பெரியாறு அணை பணிக்கு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயக்கம்

கேரள போலீஸார் மற்றும் அம்மாநில வனத்துறையினர் தொந்தரவு காரணமாக பெரியாறு அணை பணிக்குச் செல்ல தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணியில் தினந்தோறும் செயற்பொறியாளர் மாதவன் தலைமையில் 2 உதவி செயற்பொறியாளர்கள், 2 உதவி பொறியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பெரியாறு அணையில் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக நியமிக்கப்பட்ட கேரள போலீஸார் மற்றும் அம்மாநில வனத்துறையினர் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருவதால், அங்கு பணிக்கு செல்ல விருப்பப்படாமல் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கேரள போலீஸார் அணை பகுதியிலும், வனத்துறையினர் தேக்கடி படகுத் துறையிலும் நின்று கொண்டு கண்காணிப்பு, பாதுகாப்பு என்று கூறி அணைக்குச் செல்லும் தமிழக அதிகாரிகளிடம் அடையாள அட்டைகளை காட்டக் கூறியும், எந்த காரணத்துக்காக அணைக்குச் செல்கிறோம். என்ற விளக்கத்தை அளித்தால் மட்டுமே அணைக்குச் செல்ல அனுமதி தருகின்றனர்.

இல்லாவிட்டால் அனுமதிக்க மறுத்து நீண்ட நேரம் காக்க வைக்கின்றனர். இவர்களின் தொந்தரவுகளை பொறுக்க முடியாமல் பெரியாறு அணையின் உதவி செயற்பொறியாளரும், மத்திய துணைக்குழுவின் பிரதிநிதியுமான சவுந்தரம், கடந்த மாதம் விருப்ப மாறுதல் பெற்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைக்குச் சென்று விட்டார். இந்த இடத்துக்கு நிலக்கோட்டையில் பணியாற்றி வந்த குமார் என்ற உதவி செயற்பொறியாளர் நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் பணியில் சேர விரும்பாமல் கம்பம் சண்முகாநதி அணை பணிக்கு மாறுதல் பெற்று சென்று விட்டார். இதற்கிடையில் பெரியாறு அணையில் பணியாற்றி வந்த குமார் என்ற மற்றொரு உதவி செயற்பொறியாளர், கடந்த வாரம் நெல்லைக்கு விருப்ப மாறுதலில் சென்று விட்டார். பெரியாறு அணையில் உள்ள காலி பணியிடங்களுக்குச் செல்ல தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x