Published : 22 Dec 2021 02:59 PM
Last Updated : 22 Dec 2021 02:59 PM
ஈரோடு அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை இறந்ததையடுத்து உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூரை அடுத்த அடையன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி மங்கையர்கரசிக்கு, இவருக்கு கடந்த 19-ம் தேதி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று காலை, மங்கையர்கரசியை கருத்தடை அறுவைச்சிகிச்சை செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளது.
அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் குழந்தையைப் பார்த்தபோது, அது உயிரிழந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மங்கையர்கரசி மற்றும் அவரது உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
சரியான சிகிச்சை மற்றும் கவனிப்பு இல்லாததால் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது என குற்றம்சாட்டிய மங்கையர்கரசியின் உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் மருத்துவமனை வளாக கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு மருத்துவமனை போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தால், இறப்பிற்கான காரணம் தெரியவரும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் பெற்றோர் அதற்கு உடன்படாத நிலையில், அவர்களது விருப்பப்படி, குழந்தையின் உடலை பெற்றுக் கொண்டு, போராட்டத்தைக் கைவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT