Last Updated : 22 Dec, 2021 08:42 AM

 

Published : 22 Dec 2021 08:42 AM
Last Updated : 22 Dec 2021 08:42 AM

பூஞ்சேரி பகுதியில் நரிக்குறவ சமுதாய மக்களுக்கு முதல்வர் வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் குளறுபடி: இந்த நிலம் வேண்டாம் என நரிக்குறவர்கள் வேதனை

மாமல்லபுரம்: பூஞ்சேரியில் நரிக்குறவ சமுதாய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய வீட்டுமனை பட்டாவில் குளறுபடிகள் உள்ளதால், நிலமே வேண்டாம் என அவர்கள் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் வசிக்கும், நரிக்குறவ சமுதாய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்தநவ.4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பூஞ்சேரிக்கு வந்தார். அங்குஏற்கெனவே குடியிருக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு 59,புதிதாக 22 என மொத்தம் 81 பேருக்குவீட்டுமனைப் பட்டா உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது, சமுக வலைத்தளம்மூலம் அறியப்பட்ட நரிக்குறவ பெண் அஸ்வினியின் வீட்டுக்கு சென்றார். பின்னர், நரிக்குறவர் மற்றும் இருளர் குடியிருப்புகளை பார்வையிட்டு வசதிகள் குறித்து கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இங்கு 59 குடும்பங்கள் ஏற்கெனவே வசித்து வரும் குடியிருப்புகளின் பின்னால், கழிப்பறை உட்படபல்வேறு தேவைகளுக்காக புழக்கத்தில் உள்ள காலி நிலங்களை இணைத்து நரிக்குறவர்கள் 11, இருளர்கள் 11 என 22 பேருக்கு தலா ஒன்றரை சென்ட் பட்டா நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள்; புதிதாக வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளும் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அச்சமுதாயத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, நரிக்குறவ பெண் அஸ்வினி கூறியதாவது: பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர்களின் குடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் புதிதாக30 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அதிகாரிகளும் அனைத்தையும் பதிவு செய்து சென்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் 11 நரிக்குறவ பயனாளிகளுக்கு மட்டுமே வீட்டுமனை பட்டா வழங்கினார். மேலும், ஏற்கெனவே வசிக்கும் நரிக்குறவர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள ஒன்றரை சென்ட் நிலப்பகுதிக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் 2 சென்ட் நிலம் கேட்டோம்.

மேலும், முதல்வர் வீட்டுமனை பட்டாவுக்கான சான்று வழங்கும் வரையில் நிலம் குறித்த தகவல்கள் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. நிகழ்ச்சி முடிந்த சில நாட்களுக்கு பிறகு நாங்கள் வசித்து வரும் குடியிருப்புகளின் பின்னால் உள்ள நிலங்களில், குடியிருப்பு அமைத்து தருவதற்காக அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மூலமே நிலம் குறித்த விவரங்களை அறிந்தோம். அவர்களிடம் முறையிட்டபோது, 'எங்கள் பணி வீடு கட்டித்தருவது மட்டுமே மாவட்ட ஆட்சியரிடம்தான் நீங்கள்முறையிட வேண்டும்' என தெரிவித்தனர். இதனால், எங்களுக்கு இந்தபட்டா நிலம் வேண்டாம் என தெரிவித்தோம். ஆனால், அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறி சென்றனர்.

புதிதாக வீட்டுமனை பெற்ற பயனாளிகளுக்கு இதே பகுதியில்தான் நிலம் வேண்டும் என நாங்கள் கூறவில்லை. வேறு பகுதியில் வழங்கினாலும் நாங்கள் பெற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்.

இந்த நிலத்தில் வீீடு கட்டினால்,ஏற்கெனவே அங்கு வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் புதிதாக வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் கழிப்பறை, குளியலறை ஏற்படுத்த முடியாது. மிகச்சிறிய குடியிருப்பு மட்டுமே அமைக்க முடியும். காற்றோட்டம் இருக்காது. அதனால், பட்டா நிலமும் வேண்டாம், வீடும் வேண்டாம் என தெரிவித்துள்ளோம். விரைவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளோம் என்றார்.

இதுகுறித்து, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் கூறியதாவது: பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அவர்கள் வசிப்பதால், அரசின் சட்ட விதிகளின்படி பயனாளிக்கு ஒன்றரை சென்ட் நிலம் மட்டுமே வழங்க முடியும். நரிக்குற மக்கள் விரும்பினால் அருகில் உள்ள வேறு நிலத்தில் புதிய 11 பயனாளிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், நரிக்குறவ மக்கள் தங்கள் பகுதியில் இருளர் மக்கள் வசிக்கக் கூடாது என கருதுகின்றனர். ஆனால், பல ஆண்டுகளாக அதேப் பகுதியில் வசிக்கும் இருளர் மக்களை எப்படி வேறு பகுதிக்கு அனுப்ப முடியும். அதனால், கோட்டாட்சியர் மூலம் நரிக்குறவ சமுதாய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x