Published : 21 Dec 2021 10:57 PM
Last Updated : 21 Dec 2021 10:57 PM
கோவை: கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஆர்.குருபிரசாத் (21). இவர் தனது நண்பர் இருசக்கர வாகனத்தை ஓட்டிசெல்ல, பின்னிருக்கையில் அமர்ந்தவாறு கடந்த 2015 நவம்பர் 22-ம் தேதி மருதமலை சாலையில் கல்வீரம்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிரே வந்த அரசுப்பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், குருபிரசாத்தின் வலதுகால் முட்டிக்குக் கீழ்க்பகுதி துண்டிக்கப்பட்டது. விபத்து நடந்தபோது குருபிரசாத், பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து தினமும் ரூ.750 வருவாய் ஈட்டி வந்துள்ளார்.
விபத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, எதிர்கால வாழ்க்கை பாதிப்புக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க உத்தரவிடக்கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் குருபிரசாத் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “விபத்தால் வலது கால் முட்டிக்கு கீழ் பகுதி அகற்றப்பட்டுள்ளது. இதனால், விபத்துக்கு முன்பிருந்ததைப்போல அவரால் நின்று பணியாற்ற முடியாது. மேலும், மருத்துவ வாரியம் அளித்த சான்றில் 80 சதவீதம் நிரந்த ஊனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனவே, அவருக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு, வலி,வேதனை உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடாக ரூ.30.99 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் அரசுப்போக்குவரத்துக்கழகம் வழங்க வேண்டும்"என கடந்த 2019 செப்டம்பர் 23-ம் தேதி உத்தரவிட்டது. அதன்பிறகும், உரிய காலத்தில் இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்றத்தில் உத்தரவை நிறைவேற்றும் மனுவை குருபிரசாத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி முனிராஜா, அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில், இன்று காலை வழித்தட எண் 96, 115ஏ, 99பி, 96 என 4 அரசுப்பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து, அரசுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் மாதம் ரூ.10 லட்சம் அளிக்கும் வகையில், பின்தேதியிட்ட காசோலைகள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் மாலையில் பேருந்துகள் விடுவிக்கப்பட்டன. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.பாலசண்முகம் ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT