Published : 21 Dec 2021 07:45 PM
Last Updated : 21 Dec 2021 07:45 PM
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் சம்பந்தி இருவரும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி அண்ணா நகர், 14-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (72). இவரது மனைவி ஹேமலதா (எ) வனஜா (68). இவர்கள் தற்போதைய வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் சம்பந்தியாவார்கள். பாலகிருஷ்ணனின் மகன்கள், ஒரு மகள் பிரான்சில் இருந்ததால், பாலகிருஷ்ணன், வனஜா இருவர் மட்டும் அண்ணா நகர் வீட்டில் தனியாக வசித்தனர்.
கடந்த 21.11.2018-ம் தேதி பாலகிருஷ்ணன் வீடு திறந்து கிடந்தது. பக்கத்து வீட்டில் வசிப்பவர் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தார். தேனீ ஜெயக்குமார் அப்போது அங்கு வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோக்கள் திறக்கப்பட்டு, பொருட்கள் அலங்கோலமாகக் கிடந்தன. படுக்கை அறையில் பாலகிருஷ்ணன், அவரது மனைவி வனஜா கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதையடுத்து தேனீ ஜெயக்குமார் புகார் தந்தார் அப்போதைய முதல்வர் நாராயணசாமியின் தொகுதியில் இச்சம்பவம் நடந்திருந்ததால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
கைரேகைப் பதிவுகளைச் சேகரிக்கும்போது, வீட்டின் அறையில் டிரைவரின் அடையாள அட்டை ஒன்று கிடந்தது. அதை வைத்து, கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த காசிம் (எ) முகமது காசிம் (31), அவரது நண்பர் இலியாஸ் (எ) முகமது இலியாஸ் (30) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
பாலகிருஷ்ணன் வீட்டில் ஆக்டிங் டிரைவராகப் பணியாற்றியவர் காசிம். பாலகிருஷ்ணன் வீட்டில் வெளிநாட்டுப் பணம் அதிகம் இருக்கும் என்ற ஆசையில், தனது நண்பர் இலியாஸுடன் சேர்ந்து தம்பதியைக் கொலை செய்துள்ளார். பணம் இல்லாததால், வனஜா கழுத்தில் அணிந்திருந்த நகையை மட்டும் அறுத்துச் சென்றுள்ளார் என்று போலீஸார் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் 22 சவரன் நகை, வெள்ளிப் பொருட்களை போலீஸார் லாஸ்பேட்டையில் பறிமுதல் செய்தனர். கைதானதிலிருந்து இருவருக்கும் ஜாமீன் தரப்படவில்லை.
இரட்டைக் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்தது. நீதிபதி இளவரசன் விசாரித்தார். அரசுத் தரப்பில் வழக்கிறிஞர் பாலமுருகன் ஆஜரானார். இரட்டைக் கொலை வழக்கில், நேரடி சாட்சிகள் இல்லாத நிலையில், கிடைத்த தடயங்கள் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்டவை மூலம் காசிம் மற்றும் இலியாஸ் இருவரும் சேர்ந்து, கொலை செய்தததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் வாதத்தை முன் வைத்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் முடிந்தது.
அதைத் தொடர்ந்து இவ்வழக்கில் நீதிபதி இளவரசன் இன்று மாலை தீர்ப்பு அறிவித்தார். அவர் கூறுகையில், "கொலையாளிகள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. நகை திருட்டுக்கு இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT