Published : 21 Dec 2021 06:31 PM
Last Updated : 21 Dec 2021 06:31 PM
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து தனது தொகுதி மக்களின் பிரச்சினைக்காக சில கோரிக்கைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் முன்வைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் 3 நாட்கள் சிறப்பு குறைதீர் முகாம் வட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. இதன்படி லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு ஆகிய 4 வட்டங்களில் நேற்று சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், 2-வது நாளான இன்று திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி ஆகிய 4 வட்டங்களில் குறைதீர் முகாம் நடைபெற்றது.
திருவெறும்பூரில் நடைபெற்ற குறைதீர் முகாமில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "மாநகராட்சியின் 61-வது வார்டு முதல் 65-வது வார்டு வரையிலான பகுதிகளில் புதை சாக்கடை பணிகளை வேகப்படுத்தி, சாலைப் பணிகளை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் கே.என்.நேரு, “புதை சாக்கடைத் திட்டத்தில் எல் அன்ட் டி நிறுவனம் மேற்கொள்ளும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆனால், அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தரப்பினர் எடுத்துள்ள பணிகள் முடிவடையாமல் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், இந்தப் பகுதியில் மக்களுக்கான சாலை, குடிநீர், புதை சாக்கடை ஆகிய தேவைகள் அனைத்தும் 3 மாதங்களுக்குள் மிகச் சிறப்பாக முடித்துத் தரப்படும்" என்றார்.
இதேபோல், மருங்காபுரி வட்டம் துவரங்குறிச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, “மணப்பாறை, மருங்காபுரி ஆகிய 2 இடங்களில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை விடுத்துள்ளார். முதலில் எங்கு அமைப்பது என்று யோசிக்காமல், 2 இடங்களிலும ஒரே நேரத்தில் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT