Published : 21 Dec 2021 04:15 PM
Last Updated : 21 Dec 2021 04:15 PM
மதுரை: "கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் பேசலாமா?" என சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் யூடியூபர் சாட்டை துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகளை பதிவிட்டதற்காக போலீஸாரால் இவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், எதிர்காலத்தில் யார் மீதும் அவதூறு பரப்பமாட்டேன் என சாட்டை துரைமுருகன் உறுதியளித்ததால், அவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது.
அதன் பிறகு கன்னியாகுமரி தக்கலையில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக துரைமுருகனை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், கருணாநிதி, குஷ்பு குறித்து அவதூறு பதிவுகளை பதிவிட்ட வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சாட்டை துரைமுருகனின் பேச்சுக்களை எழுத்து வடிவில் நீதிபதியிடம் வழங்கி, நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பிறகு துரைமுருகன் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, "சாட்டை துரைமுருகன் பேச்சின் முதல் வார்த்தையை படிக்கவே கூச்சமாக உள்ளது. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் பேசலாமா? இனிமேல் யாரையும் அவதூறாக பேசமாட்டேன் என உறுதியளித்த பின்னரும், அதேபோல் சாட்டை துரைமுருகன் பேசியது ஏன்? அவரைப் போன்றவர்களின் செயல்களை ஊக்குவிக்க முடியாது'' என்று கூறி தீர்ப்பை ஜன.5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT