Published : 21 Dec 2021 03:40 PM
Last Updated : 21 Dec 2021 03:40 PM

நெடுஞ்சாலை உணவகங்களில் உணவு தரமில்லை என்றால் நடவடிக்கை பாயும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டம்

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

நெடுஞ்சாலை உணவகங்களில் வழங்கப்படும் உணவு தரமில்லை என்றால் நிச்சயம் நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

நெடுஞ்சாலை மோட்டல்களில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அங்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்று எழும் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ''டெண்டர் விடப்பட்டுதான் நெடுஞ்சாலைகளில் மோட்டல்கள் நடத்தப்படுகின்றன. அங்குதான் வண்டி நிறுத்துவார்கள். பணம் கட்டும் ஓட்டலில்தான் முதலில் நிறுத்த வேண்டும். வேறு இடத்தில் நிறுத்த முடியாது. அவர்கள் அரசாங்கத்திற்கு பணம் கட்டுகிறார்கள்.

குறிப்பாக மோட்டல்களுக்கு என்ன வரையறை கொடுக்கப்பட்டுள்ளது என்றால் தரம், அளவு சரியாக இருக்க வேண்டும். சென்ற ஆட்சியில் இருந்ததை விட விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான். இதில் ஏதாவது புகார் இருந்தால், தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம். அதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.

மேலும், இந்த உணவகங்களில் வழங்ப்படும் உணவின் தரம் குறித்து ஆராய உணவுப் பாதுகாப்புத்துறை என்று ஒன்று உள்ளது. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த மோட்டலுக்குச் சென்று உணவுத் தரம் குறித்து ஆய்வு செய்கிறார்கள். குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில்தான் என்றில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு சாலைகளில், பெங்களூரு, மதுரை, சென்னை, தஞ்சாவூர் என அனைத்துச் சாலைகளிலும் மோட்டல்கள் உள்ளன. ஆய்வு செய்பவர்கள் அனைத்து இடங்களுக்கும் செல்கிறார்கள். சரியாக இல்லையெனில் உடனே நோட்டீஸ் கொடுத்துவிடுவார்கள்.

பேருந்துகளை எந்தெந்த மோட்டல்களில் நிறுத்தவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் டெண்டர் எடுத்துள்ளதற்காக அவர்கள் மோசமான உணவு அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தரம் குறைந்தால் உடனே அந்த டெண்டர் ரத்து செய்யப்படும். புதியவர்களுக்கு உத்தரவு அளிக்கப்படும். ஏதாவது புகார் இருந்தால் தெரிவியுங்கள். நிச்சயம் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்கிறோம்'' என்றார்.

விக்கிரவாண்டி உணவகம் மீது நடவடிக்கை

விக்கிரவாண்டி உணவக சம்பவம் குறித்து புகார்கள் வந்தது பற்றிக் கேட்டதற்கு, ''அந்த மோட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மோட்டலுக்கான உத்தரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. உணவு ஆய்வின்போது 6 மோட்டல்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு பணம் கட்டுகிறார்கள் என்பதற்காக தரமில்லாத உணவை மக்களுக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது. அப்படியான குற்றச்சாட்டுகள் வந்தால் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்'' என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

சிறப்புப் பேருந்துகள் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வரும் புகார்கள் குறித்துக் கேட்டபோது, ''அப்படியெல்லாம் சிறப்புப் பேருந்துகள் பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை'' என்றார்.

பெண்களுக்கு இலவசம்

பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் குறித்து பதில் அளித்த அமைச்சர், ''பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் என்பது முதல்வரின் எண்ணத்தில் உதித்த திட்டம். மேலும் இது தேர்தல் அறிக்கையுடன் தொடர்புடையது. இதற்காக அரசு உதவித்தொகை வழங்குகிறது. அதனால் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 35 லட்சம் பேருக்கு மேலாகப் பெண்கள் பயணம் செய்கிறார்கள். பேருந்தில் மொத்தமாக ஒன்றரை கோடி பேர் பயணம் செய்கிறார்கள். கவனமாகவே இந்த திட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

வீடியோ வடிவில் காண:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x