Published : 21 Dec 2021 09:38 AM
Last Updated : 21 Dec 2021 09:38 AM

பிறமாநிலங்களில் பாடநூல்களை அச்சிடுவதால் தமிழ்நாட்டு அச்சகங்கள் பாதிப்பு: அரசுக்கு வைகோ கண்டனம்

அண்டை மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அச்சகங்கள் மட்டுமே, அரசின் டெண்டர் பட்டியலில் உள்ளன; தமிழ்நாட்டு அச்சகங்கள் பங்கு பெற முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே, பிற மாநில அச்சகங்களும் பங்கேற்க முடியும் என்ற விதிமுறை உள்ளது. இதனால், தமிழ்நாட்டு அச்சுக்கூடங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே தமிழ்நாடு அரசு, இந்தப் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்; சிறு குறு அச்சுத் தொழிற்கூடங்களைப் பாதுகாக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பாடநூல்களை அச்சிடுகின்ற சிறு, குறு அச்சுத் தொழிற்கூடங்கள், சென்னை, சிவகாசி மற்றும் பல ஊர்களில் இயங்கி வருகின்றன. கரோனா முடக்கக் காலத்திலும், எத்தனையோ இடையூறுகளுக்கு நடுவே பணியாற்றி, புத்தகங்களை அச்சிட்டு, தமிழ்நாடு முழுமையும் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கின்றனர்.

அச்சுத் தொழிற்கூடங்கள் மட்டும் அன்றி, அது சார்ந்த பல்வேறு சிறு தொழிற்கூடத்தினரும், அரசின் தேவை கருதி, உழைத்து இருக்கின்றனர். தீப்பெட்டிகள், பட்டாசுகள் மட்டும் அன்றி, சிவகாசி தொழில் நகரம், அச்சுக் கலையிலும், புகழ்பெற்று இருக்கின்றது. ஜப்பான், ஜெர்மனி போன்ற முன்னேறிய நாடுகளில் இருந்து புதிய கருவிகளை இறக்குமதி செய்து, ஏராளமான அச்சகங்கள் இயங்கி வருகின்றன. வானம் பார்த்த மண்ணாகிய சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் மேற்கண்ட தொழில்களின் மூலமாக இலட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருமே, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தையே சார்ந்து இயங்கி வருகின்றனர். ஆனால், முழுமையான வாய்ப்புகள் கிடைக்காமல், தொழில் கடனுக்காக வங்கிகளுக்கு மாதத் தவணை கட்ட முடியாமல், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது அண்டை மாநிலங்களில் உள்ள அச்சகங்களிலும் புத்தகங்களை அச்சடித்து, கன்னியாகுமரி வரையிலும் அவர்களே புத்தகங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் ஏற்பாடுகள் செய்து இருக்கின்றது. இதனால், தமிழக அரசுக்கு 6 கோடி ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்படுகின்றது. தமிழ்நாட்டு அச்சகங்கள் பாதிக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். கடந்த காலங்களில், அண்டை மாநிலங்களுக்கு ஒரு விழுக்காடு பணிகள் மட்டுமே தரப்பட்டன. அப்போது, சிவகாசியில், 53 சிறு குறு அச்சகங்கள் மட்டுமே இருந்தன. அவர்களே, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திற்குத் தேவையான 99 விழுக்காடு நூல்களை, குறித்த காலத்திற்குள் அச்சிட்டு, மாநிலம் முழுமையும் பள்ளிகளுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். ஆனால், தற்போது, 48 வெப் ஆப்செட் அச்சகங்கள், 51 ஆப்செட் அச்சகங்கள் ஆக மொத்தம் 99 அச்சகங்கள் இயங்கி வருகின்றன; சென்னையில் 30 அச்சகங்கள் உள்ளன; அவற்றின் அச்சிடும் திறன் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இவர்கள், மேலும் வங்கிக் கடன் பெற்று, புதிய கருவிகளை நிறுவி இருக்கின்றனர். பட்டதாரிகள், பொறியாளர்கள், கணினிப் பொறியாளர்கள் என புதிதாக பல ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த அச்சகங்களில், பாடநூல்களைத் தவிர்த்து, வேறு எந்த வேலைகளும் செய்ய முடியாது. அண்டை மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அச்சகங்கள் மட்டுமே, அரசின் டெண்டர் பட்டியலில் உள்ளன; தமிழ்நாட்டு அச்சகங்கள் பங்கு பெற முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே, பிற மாநில அச்சகங்களும் பங்கேற்க முடியும் என்ற விதிமுறை உள்ளது. இதனால், தமிழ்நாட்டு அச்சுக்கூடங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, தமிழ்நாடு அரசு, இந்தப் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்; சிறு குறு அச்சுத் தொழிற்கூடங்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x