Published : 20 Dec 2021 06:26 PM
Last Updated : 20 Dec 2021 06:26 PM
திருச்சி: பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 70 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லி தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்வேறு தரப்புப் பெண்களிடமும் ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு ஆய்வறிக்கையை அளித்தனர்.
அதன்படி, பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக அதிகரிக்கப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுப் பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சட்டத்திருத்தம் செய்வதற்கான மசோதாவை நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெண்ணின் குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அதன் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறும்போது, "மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்களால் தற்போது 10 வயது முதல் 13 வயதுக்குள்ளாகவே சிறுமிகள் பூப்பெய்தி விடுகின்றனர். எனவே, கிராமப்புறங்களில் 21 வயது வரை திருமணம் செய்யாமல் வீட்டில் அவர்களைப் பேணுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் பெற்றோருக்கு உள்ளன. எனவே, பெண்ணின் குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, சாலை மறியலில் ஈடுபட்டதால் பெண்கள் 10 பேர் உட்பட 70 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT