

திருச்சி: "கசங்கிய காதிதமோ, துண்டுச்சீட்டோ எந்த வகையில் கோரிக்கை மனுவை அளித்தாலும், அதை நிறைவேற்றுவதுதான் எங்களது முக்கிய கடமை" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் டிச.20, 21, 22 ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதன்படி, முதல் நாளான இன்று லால்குடி வட்டம், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி, ஸ்ரீரங்கம் வட்டம் திருச்சி - திண்டுக்கல் சாலை தாயனூர் கேர் கல்லூரி, திருச்சி மேற்கு வட்டம் செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இன்று குறைதீர் முகாம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: ”தேர்தலின்போது வாக்கு கேட்டு எந்த அன்பு, பணிவுடன் வந்தோமோ அதே நிலையில்தான் இப்போது பிரச்சினைகளைக் கேட்டு, கோரிக்கை மனுவைப் பெறவும் வந்துள்ளோம். எந்த நம்பிக்கையுடன் மனு அளிக்க வந்தீர்களோ, அதே நம்பிக்கையுடன் வீடு திரும்புங்கள். கசங்கிய காதிதமோ, துண்டுச்சீட்டோ எந்த வகையில் கோரிக்கை மனுவை அளித்தாலும், கோரிக்கையை நிறைவேற்றுவதுதான் எங்களது முக்கிய கடமை.
உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பரிசீலித்து நிறைவேற்றித் தருவார்கள். இங்கு அளித்த மனுக்களை நாங்கள் காகிதமாக மட்டும் பார்க்கவில்லை. எங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கிறோம். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் எங்களது பணி இருக்கும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.