Published : 20 Dec 2021 05:14 PM
Last Updated : 20 Dec 2021 05:14 PM
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைவதற்காக, அப்பகுதி மக்கள் ஏராளமானோர் தங்களது நிலங்களை கொடுத்து உதவியுள்ளனர். நிலம் வழங்கியவர்களுக்கு அணுமின் நிலையத்தில் கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த 1999ம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்பட்டது. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இடம் அளித்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயமாக பணி வழங்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த ஜூலை மாதம், கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஆட்சியர் விஷ்ணு, அணுமின் நிலைய வளாக இயக்குநர் மனோகர் காட்போலே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ராதாபுரம் தாலுகாவில் உள்ள இளைஞர்களுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சர்வதேச தரத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும், அணுமின் நிலைய வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கும், அணுமின் நிலையத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் வாரிசுகளுக்கும் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இப்படி பல்வேறு சூழலில், மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், 3, 4-வது அணு உலையில் பணியாற்ற ஒப்பந்த பொறியாளர் பதவிக்கு சமீபத்தில் எழுத்து தேர்வு நடந்தது. இதில், கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட நிலையில், கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று கூறி அவர்களை அணுமின் நிலைய நிர்வாகம் புறக்கணித்துள்ளது.
அதோடு, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலரை பொறியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, அவர்கள் நேர்முகத்தேர்வுக்கு டிசம்பர் 20, 21-ம் தேதிகளில் அழைக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது. அணுமின் நிலையம் அமைப்பதற்காக அம்மண்ணின் மக்கள் பலர், தங்களது வீடுகளையும், விளைநிலங்களையும் இழந்துள்ளனர். வாழ்வாதாரங்களை இழந்த அம்மக்கள், வேறு இடங்களில் குடியேறி வசித்து வருகின்றனர். தங்களின் மகனுக்கோ, மகளுக்கோ அணுமின் நிலையத்தில் பணி கிடைக்கும் என்ற பெரும் கனவோடு காத்திருக்கும் பெற்றோர்களுக்கு, கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் இப்போக்கு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற ஒரே கோரிக்கையை முன்னிறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூடங்குளம் அணுமின்நிலையம் முற்றிலுமாக மூடப்பட வேண்டும் என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை இருந்தாலும் அப்பகுதி மக்களின் போராட்டங்களுக்கும் பணி கிடைக்கும் என்ற பெரும் கனவோடு காத்திருக்கும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசும், தமிழக அரசும் வேலைவாய்ப்பு அளிக்க முன்வரவேண்டும்.
எனவே, விதிமுறையை மீறி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதை நிறுத்திவிட்டு, 1999–ம் ஆண்டு ஒப்பந்தப்படி நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கவேண்டும். கூடங்குளம் பகுதியில் வசிப்பதாக போலியாக குடியுரிமை சான்று சமர்ப்பித்து, அணுமின் நிலையத்தில் 95 விழுக்காட்டினர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களை பணிநீக்கம் செய்து விட்டு உள்ளூரில் நிலம் கொடுத்தவர்களை பணியில் சேர்க்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது" என்று வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT