Published : 20 Dec 2021 02:54 PM
Last Updated : 20 Dec 2021 02:54 PM
நெல்லையில் பள்ளியின் கழிவறை சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் மேலும் 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். எஸ்.என். ஹைரோட்டில் மாநகராட்சி அலுவலகத்தையொட்டி143 ஆண்டுகள் பழமையான சாஃப்டர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. திருநெல்வேலி சிஎஸ்ஐ டயோஸிசின் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் இந்தப் பள்ளியில் திருநெல்வேலி மாநகரத்திலிருந்து மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இந்தப் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளர் செல்வகுமார், தலைமையாசிரியை ஞானசெல்வி, கான்ட்ராக்டர் ஜான்கென்னடி ஆகியோர் மீது திருநெல்வேலி டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பள்ளித் தாளாளர் செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி, தலைமை ஆசிரியர் ஞானசெல்வி ஆகியோருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், நெல்லை நெல்லை டவுன் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளி விபத்து தொடர்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் பெர்சிஸ் ஞானசெல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் சுதாகர் அருள் டைட்டஸ் மற்றும் ஜேசு ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளியின் தாளாளர் செல்வகுமார் அந்தப் பதவியில் இருந்து தென் இந்திய திருச்சபை நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த மாணவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும், காயமடைந்த மாணவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக பள்ளியை நிர்வகித்துவரும் தென்னிந்தியத் திருச்சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT