Last Updated : 20 Dec, 2021 07:11 AM

 

Published : 20 Dec 2021 07:11 AM
Last Updated : 20 Dec 2021 07:11 AM

வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான உதவித்தொகை திட்டம் மறுசீரமைப்பு: பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆதிதிராவிட நலத் துறை திட்டம்

சென்னை: பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க,வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை திட்டம் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பயிலுவதற்கான கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் வெளிநாட்டில் படிப்பதற்கான அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட டிஓஇஎப்எல் (TOEFL), ஐஇஎல்டிஎஸ் (IELTS), ஜிஆர்இ (GRE), ஜிஎம்ஏடி (GMAT) தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தேவையான பயிற்சிகள் திட்டப் பகுதி-1-ன் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதேபோல, தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விரும்பியநாட்டில் மேற்படிப்பைப் பயிலுவதற்குத் திட்டப்பகுதி-2-ன் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.

ஆரம்பகட்டத்தில் இந்த திட்டத்தில் இணைய, பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1.44 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் மிகக் குறைவான மாணவர்களே பயிற்சிக்கு தகுதி பெற்றனர். இதையடுத்து, கடந்த 2010-ல் பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. இருந்தபோதிலும், திட்டம் தொடங்கி 19 ஆண்டுகளில் இதுவரை 4 மாணவர்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர்.

இதனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற தொடங்கப்பட்ட திட்டம் தோல்வியடைந்தாக கருதப்பட்டது. இந்நிலையில், அதிகப்படியான மாணவர்கள் பயனடையும் வகையில் திட்டம்முழுவதும் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பல்வேறு கல்வி உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் பயனடைந்தும் வருகிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் மேற்படிப்பைப் பயிலுவதற்கான தமிழக அரசின் திட்டம் தோல்வியடைந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

அதாவது, தற்போதைய காலகட்டத்தில் உதவித் தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் என்பது மிகவும் குறைவு. அடுத்தபடியாக திட்டப் பகுதி 1-ன் கீழ் உள்ள தகுதித் தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும். இதில் தேர்ச்சி பெறுவதற்கு ஆங்கிலப் புலமை அதிகம் தேவைப்படுவதால், மாணவர்கள் மிகவும் சிரமமடைந்தனர். இவற்றை முதலில் சரிசெய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முதல் தகுதியான வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயிற்சிக்கு அதிகப்படியான மாணவர்கள் தகுதி பெறுவார்கள். இதையடுத்து, தேர்வுகளில் தேர்ச்சிபெறுவதற்காக சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு தகுதித் தேர்வுக்கும் தலா 125 பேர் வீதம் 500 மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க ரூ.1.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெறும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நாட்டில் உயர்கல்வி பயில ரூ.36 லட்சம் வரை நிதி வழங்கப்படவுள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.3.60 கோடி நிதி என மொத்தம் ரூ.5.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 50-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x