Published : 08 Mar 2016 09:29 AM
Last Updated : 08 Mar 2016 09:29 AM
‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’ - மதுரை அருகே நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட அகதியின் கடைசி குரல். இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் உயிர் பிழைக்க தப்பி வந்து தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கும் அகதிகளின் அவலம் சொல்லி மாளாது.
இலங்கையில் இருந்து தமிழகத் துக்கு 1983-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை 3 லட்சத்து 14 ஆயிரத்து 259 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இதில் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் அரசு உதவி மற்றும் சர்வதேச உதவிகள் பெற்று சுயமாக இலங்கை திரும்பினர். தற்போது தமிழக முகாம்களில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 259 இலங் கைத் தமிழர்கள் அகதிகளாக வசிக்கின்றனர். இந்த முகாம்களில் தங்கி இருக்கும் ஆண்களுக்கு மாதம் ரூ.1,000, பெண்களுக்கு ரூ.750, குழந்தைகளுக்கு ரூ.400 அரசு வழங்குகிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உச்சபட்டியில் உள்ள அகதிகள் முகாமில், 450 குடும் பங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த முகாமைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் நேற்று முன்தினம் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்தார். அப்போது, ‘என்னோட மரணம், இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலை” எனச் சொல்லிவிட்டு அவர் கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை அகதிகள் சிலர் கூறும்போது, ‘‘ஒவ்வொரு மாதமும் வருவாய்த் துறையினர் முகாமில் 3 முறை ஆய்வு செய்து, இந்த உதவித் தொகையை வழங்குவர். ஒருமுறை ஆய்வுக்கு வரும்போது முகாமில் அகதிகள் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உதவித் தொகை கிடையாது.
தற்கொலை செய்த ரவீந்திர னுக்கு மனைவி, 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். 2 மகள் களை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். கடைசி மகன் பிரதீபனுக்கு ரத்தக் கசிவு நோய் இருந்துள்ளது. அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாரிகள் ஆய்வு நடத்த முகாமுக்கு வந்த போது மகனை அழைத்து வர முடியாத காரணத்தை ரவீந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் வரு வாய் ஆய்வாளர் ஒருவர் தனது ஆய்வின்போது ரவீந்திரனின் மகன் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த ரவீந்திரன், சிகிச்சையில் இருக்கும் மகனை எப்படி அழைத்து வர முடியும் என அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால், அதை வருவாய் ஆய்வாளர் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த ரவீந்திரன் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலைக்கு இது மட்டுமே ஒரு காரணம் மட்டுமல்ல. அரசு வழங்கும் உதவித் தொகை, மின் கட்டணத்துக்கும், மற்ற செலவு களுக்குமே சரியாக உள்ளது. உள்ளூரில் யாரும் எங்களுக்கு வேலை கொடுப்பதில்லை. அத னால், பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கவும், திடீர் செலவி னங்களுக்கும் வெளியூர் வேலைக் குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால், சில நேரங்களில் ஆய்வு நேரத்தில் வர முடியாமல் போவதால் எங்களுக்கு உதவித்தொகை வழங்க மறுக்கின்றனர்.
மேற்கூரை, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த மண் வீடுகளில்தான் வசிக்கிறோம். கழிப்பிட வசதி இல்லை. சமீபத்தில் 16 குடும்பத் தினருக்கு மட்டும் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த வீடு மொத்தமாகவே 15-க்கு 10 இடத் தில்தான் உள்ளது. ஜன்னல் கிடையாது. படுக்கை அறை, குளியல் அறை, கழிப்பிடம் எதுவும் கிடையாது. அந்த வீட்டில் திருமணம் முடித்தவர்கள், பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் எப்படி ஒன்றாக வசிக்க முடியும். முன்பு ஆண்டுக்கு ஒருமுறை சமையல் பாத்திரம், இரண்டு தட்டுகள், டம்ளர், பாய் கொடுத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக அதையும் நிறுத்திவிட்டனர். எங்களுக்கு குடி யுரிமை வழங்காவிட்டாலும் பர வாயில்லை. எங்களுக்கான அடிப் படை உரிமைகளையாவது வழங்கி சுதந்திரமாக வாழ அரசு உதவ வேண்டும்’’ என்றனர்.
விசாவில் தங்கியிருக்கும் அகதிகள்
அகதிகள் சிலர் கூறியதாவது: இந்த தலைமுறையில் இங்குள்ள எல்லோரும் பட்டம் படித்துள்ளனர். ஆனால், கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், என்ன படித்தாலும் அவர்களும் எங்களுடன் பெயிண்டிங் வேலைக்குத்தான் வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் குடியுரிமையுடன் வேலை என்ற ஆசையில், முகாம்களில் இருந்த ஏராளமானோர் தப்பிச் சென்றனர். அவர்களில் பலர் போலீஸார், கடற்படையினரிடம் சிக்கியதால் அவர்களின் முகாம் பதிவை தமிழக அதிகாரிகள் ரத்து செய்து விட்டனர்.
மனைவி, பெற்றோர், குழந்தைகள், இங்குள்ள முகாம்களில் வசித்ததால் அவர்களால் இலங்கைக்கும் செல்ல முடியவில்லை. தமிழக முகாம்களுக்கும் அகதிகளாக திரும்பி வர முடியவில்லை. அதனால், பலர் சுற்றுலா விசா, வேலைக்கான விசா வாங்கி முகாமில் வசித்து வருகின்றனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT