Published : 19 Dec 2021 06:25 PM
Last Updated : 19 Dec 2021 06:25 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி ஆலயத்தில் மரகத நடராஜருக்கு சந்தனம்படி களைதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் உலகில் 'மண் முந்தியோ, மங்கை முந்தியோ' என்ற சொல்லுக்கு ஏற்ப மிகப்பழமையானது ஆகும். இக்கோயிலில் அமைந்துள்ள மரகத நடராஜ பெருமானுக்கு நடைபெறும் சந்தனம்படி களைதல் அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் சிறப்பு பெற்றதாகும்.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு மேல் சந்தனம்படி களைதல் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மரகத நடராஜருக்கு, மகா அபிஷேகம் தொடங்கி, சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம், சந்தனம், பால், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட 32 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
ஆண்டுக்கு ஒரு முறை ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜரை சந்தனக்காப்பு இன்றி தரிசிக்க முடியும் என்பதால், இன்று காலை 10 மணியிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சந்தனம் களையப்பட்ட நடராஜருக்கு அளிக்கப்பட்ட அபிஷேகங்களை கண்டு தரிசனம் செய்தனர்.
இரவு 10 மணிக்கு மேல் கூத்தர் பெருமாள் கல்தேர் மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு மேல் மரகத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. அதனையடுத்து நாளை அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு மேல் கூத்தர பெருமான் திருவீதியுலாவும், மாலை 5 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு மேல் மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து சிறப்பு நாதஸ்வரத்தோடு பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி ரிஷப சேவை நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT