Last Updated : 19 Dec, 2021 05:03 PM

1  

Published : 19 Dec 2021 05:03 PM
Last Updated : 19 Dec 2021 05:03 PM

இலங்கைக் கடற்படை அட்டூழியம்; மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு: அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்

நேற்று கைதான 43 மீனவர்களில் சிலர்.

ராமேசுவரம்: தனுஷ்கோடி இலங்கை நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கைக் கடற்படையினர் நேற்று இரவு கைது செய்த நிலையில், இன்று மதியம் மேலும் 12 மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். இதனால் ராமேசுவரம் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மண்டபம் தென்கடல் பகுதியிலிருந்து மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்ற விசைப்படகுகள் இன்று (டிச.19) அதிகாலை மீன்பிடிக்கச் சென்றன. இந்நிலையில் இன்று மதியம் இலங்கையின் நெடுந்தீவு தலைமன்னாருக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தைச் சபரிதாஸ், இவரது அண்ணன் அருளானந்தம் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறைப்பிடித்த மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே ராமேசுவரம் மீனவர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மண்படத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் என 55 மீனவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளது, மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று 43 பேர் கைது: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று இரவு தனுஷ்கோடி இலங்கை நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.
அப்போது அப்பகுதியில் மீன்படித்த ராமேசுவரத்தைச் சேர்ந்த தென்னரசு, லியோன் பிரிட்டோ, கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளை பிடித்து, அதிலிருந்த சக்தி, கோபி, குட்வின், ரகு, பிரபு, கருமலையான் உள்ளிட்ட 43 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனர்.

யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட மீனவர்கள்: முன்னதாக நேற்றிரவு கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 43 பேரும் யாழ்ப்பாணம் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

நாளை ஆர்ப்பாட்டம்: இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளையும், 43 மீனவர்களையும் சிறைபிடித்ததை கண்டித்தும், உடனடியாக விடுவிக்கக் கோரியும் நாளை முதல் ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் நாளை ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x