Published : 19 Dec 2021 11:44 AM
Last Updated : 19 Dec 2021 11:44 AM
சென்னை: ஒமைக்ரான் தொற்று: நட்சத்திர ஹோட்டல்கள், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு வருகையை வரவேற்கும்விதமாக மக்கள் டிசம்பர் 31 அன்று நள்ளிரவில் கூடி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா வைரஸ் அச்சம் காரணமாக புததாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு எல்லாம் சரியாகிவிடும் என மக்கள் நினைத்திருத்தனர்.
ஆனால் இந்த ஆண்டு துரதிஷ்டவசமாக ஒமைக்ரான் தொற்று லேசாக பரவத்தொடங்கியுள்ளதால் அதுகுறித்த அச்சமும் பரவத் தொடங்கியுள்ளது. அது உயிர்க்கொல்லியாக இல்லையென்று ஆறுதல் அளிக்கும் செய்திகள் வந்தாலும் அதன் பரவக்கூடியவேகம் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அது குறித்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் கடுமையாக இருக்கவேண்டுமென்றுதான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்திலும் ஒமைக்ரான் காலடி எடுத்து வைத்துள்ளது. ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலருக்கு அதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த ஆண்டும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கரோனா பரவல் முடிவுக்கு வராத நிலையில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும், அதுபோன்று செயல்படாவிட்டால் கரோனா தொற்றில் இருந்து மீள முடியாது எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்திக்கொண்டு இருப்பதால் இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மெரினா கடற்கரையில் வருகிற 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கரோனா பரவலால் பண்ணை வீடுகளிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. தற்போது மெரீனா கடற்கரையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்ணை வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஆகவே, நட்சத்திர ஹோட்டல்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து தடை விதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தடையை மீறி புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எங்காவது நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்வதோடு, ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் ஓட்டல் உரிமையாளர்களும், பண்ணை வீடு அதிபர்களும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT