Published : 18 Dec 2021 10:23 AM
Last Updated : 18 Dec 2021 10:23 AM
சென்னை: பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவீர்களா என நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ 13.12.2021 அன்று பெட்ரோலியத் துறை அமைச்சரிடம், ''எக்சைஸ் வரியைக் குறைத்த பின்பு, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தேவை. எந்தெந்த மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்தன? மேலும் விலையைக் குறைக்க முடியாததற்குக் காரணங்கள் என்ன? பொதுமக்கள் நலன் கருதி, பெட்ரோல், டீசல் விலையை, ஜிஎஸ்டி வரி வரையறைக்குள் கொண்டுவரும் திட்டம் உள்ளதா? இல்லை என்றால், அதற்கான காரணங்கள் தருக'' எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு தற்போது பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அளித்துள்ள விளக்கத்தில், ''பெட்ரோல், டீசல் விலையை சந்தை நிலவரப்படி தீர்மானிக்க, 26.06.2010 மற்றும் 19.10.2014 ஆகிய நாள்களில் அரசு முடிவு செய்தது. அன்று முதல், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பன்னாட்டு நிலவரத்திற்கு ஏற்பவும், வரிக் கட்டமைப்பு, அயல்நாட்டுச் செலாவணி மதிப்பு, உள்நாட்டுப் போக்குவரத்து மற்றும் இதுபோன்ற காரணிகளின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை, அவ்வப்போது மாற்றி அறிவித்து வருகின்றன. எனவே, பன்னாட்டுச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல் விலை மாறுகின்றது. 2017-ம் ஆண்டு, ஜூன் 16-ம் நாள் முதல், நாடு முழுமையும், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை ஆய்வு செய்து, மாற்றங்களை அறிவிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
2021-ல் மத்திய அரசு, பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 விலைக் குறைப்பு செய்தது. பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், பண வீக்கத்தைக் குறைக்கவும், ஏழை, எளிய மக்கள் நுகர்வினை மேம்படுத்தவும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்கள், மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளன; இதர மாநிலங்கள் குறைக்கவில்லை.
நவம்பர் 3-ம் நாள் நிலவரப்படி, வரிக் குறைப்பிற்குப் பிந்தைய, பெட்ரோல், டீசலின் சில்லறை விலை, மாநிலவாரிப் பட்டியல், இணைப்பு 1-ல் தரப்பட்டுள்ளது. டிசம்பர் 2021 நிலவரப்படி, வாட் வரியைக் குறைத்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைப் பட்டியல், இணைப்பு 2-ல் தரப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 279A இன் படி, பெட்ரோலியக் கச்சா எண்ணெய், உயர்தர டீசல், மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்), இயற்கை எரிகாற்று மற்றும் வான் ஊர்திகளுக்கான எரிபொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை, எந்த நாள் முதல் நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது குறித்து ஜிஎஸ்டி மன்றம்தான், முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.
மேலும், மத்திய ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 9(2) இன் படி, மேற்கண்ட பொருள்களை, ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவருவதற்கு, ஜிஎஸ்டி மன்றத்தின் பரிந்துரை தேவை. ஆனால் இதுவரை, அத்தகைய பரிந்துரை எதுவும், ஜிஎஸ்டி மன்றத்திடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை'' என்று மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி விளக்கம் அளித்துள்ளார்''.
இவ்வாறு மதிமுக அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT