Published : 17 Dec 2021 06:21 PM
Last Updated : 17 Dec 2021 06:21 PM
திருவண்ணாமலை: ஹெலிகாப்டர் விபத்து மீட்புப் பணிகளுக்காகத் தமிழக அரசுக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று (17-ம் தேதி) மண்டல பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை வாய்ப்பாகப் பார்க்கிறோம். கட்சியை வலுப்படுத்த உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது. மக்களுக்குச் சிறந்த தலைவர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் மூலமாக மக்கள் பணி செய்ய உள்ளோம். கமிஷன் பெற்று பணியாற்றும் தலைவர்களாக இல்லாமல், முன்மாதிரியாக மக்கள் பணி செய்வார்கள். பாஜக அரசின் சாதனைகள், திமுக ஆட்சி செய்யும் தவறுகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்வோம். உள்ளாட்சியில் 80 சதவீதப் பணிகள் மத்திய அரசின் பணியாகும்.
சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிடுபவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் தமிழக காவல்துறை கைது செய்கிறது. இதனை பாஜக எதிர்க்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க, இதுபோன்று செய்கின்றனர். இந்திய இறையாண்மைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளது. இனிமையான பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் கொண்டாடப் பரிசுத் தொகையைத் தமிழக அரசு கொடுக்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெறுகிறது. குற்றச்சாட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். ஆதாரத்தைக் கொடுக்காமல் அவதூறு பரப்புவது என்பது சிறந்த எடுத்துக்காட்டாக இருக்காது. பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடு குறித்து ஆதாரத்துடன் ஓரிரு நாட்களில் வெளியிடுவேன்.
பாஜக ஆட்சிக்கு வந்திருந்தால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு யானை வாங்கிக் கொடுத்திருப்போம். பஞ்ச பூத தலங்களில் யானையைக் கொடுக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் வலியுறுத்தப்படும்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல முடியாதது, லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் துயரமாக உள்ளது. தீபத் திருவிழாவுக்கு வந்தவர்களை தீவிரவாதிகளை சோதனையிடுவதுபோல் காவல்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து விட்டால், காவல்துறையின் கம்பீரத்தைப் பார்க்கலாம். காவல்துறை கம்பீரமாக இயங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
தமிழக அரசுக்குப் பாராட்டு
முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைந்த சம்பவத்தின் போது, மீட்புப் பணியில் தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டனர். அரசியலுக்காக பாஜக குற்றம் சுமத்தாது. துரிதமாகப் பணியைச் செய்துள்ளனர். உயிரைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் எரியும்போது தீயில் இருந்த ராணுவ வீரர்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். 100-க்கு 100 மதிப்பெண் வழங்க வேண்டும். முதல்வரில் தொடங்கி கடைசி மனிதன் வரை, 3 நாட்களுக்குச் செய்த மீட்புப் பணியின் மூலம், இந்தியாவில் பெருமைமிகு மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இந்தச் சம்பவத்தில் தமிழக அரசுடன் நாங்கள் இருப்போம்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT