Published : 17 Dec 2021 05:40 PM
Last Updated : 17 Dec 2021 05:40 PM
சென்னை: நெல்லை விபத்துபோல் துயரங்கள் நிகழாதவாறு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நெல்லை மாவட்டம், பொருட்காட்சி திடல் எதிரே, அரசு உதவிபெறும் டவுன் சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து, பள்ளிகள் திறக்கப்பட்டதில், சேதமடைந்த பகுதிகளைச் சுட்டிக்காட்டி ஏற்கெனவே பெற்றோர்களும், மாணவர்களும் புகார் தெரிவித்த நிலையில், பள்ளிக்கூடக் கட்டமைப்பை முறையாக ஆய்வு செய்யாமல், பராமரிப்புப் பணி மேற்கொள்ளாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமானது வருத்தத்திற்குரியது.
உயர்ந்த கனவுகளையும், லட்சியங்களையும் நெஞ்சில் சுமந்து, பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிய பெற்றோர்கள், மாணவர்களைச் சடலமாக மீட்டபோது, எத்தகைய உச்சக்கட்ட வேதனை அடைந்திருப்பார்கள் என்பதைப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும், பள்ளி நிர்வாகமும் உணர்வுபூர்வமாகச் சிந்திக்க வேண்டும்.
இந்தச் சூழலுக்கு வருத்தம் தெரிவிப்பதும், விபத்து நேர்ந்த பின்னர் ஆய்வு செய்வதும், இன்று ஒருநாள் பரபரப்பாகக் குழு அமைப்பதும் என்ற நிலையில் மட்டும் இந்தச் சூழலைக் கடந்துசெல்லக் கூடாது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் கட்டமைப்புத் தரத்தை முழுமையாக ஆய்வு செய்து இனி இதுபோன்ற துயரங்கள் நிகழாதவாறு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 4 மாணவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த மாணவர்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகியோர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT